மதன் மாயமான விவகாரம் - பெண்ணிடம் போலீசார் தீவிர விசாரணை
10/20/2016 2:52:48 PM
சென்னை, - வேந்தர் மூவிஸ் மதன் மாயமான விவகாரத்தில் பெண் ஒருவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் சீட் வாங்கித் தருவதாக 112 பேரிடம் ரூ.75 கோடி வரை மோசடி செய்ததாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வேந்தர் மூவிஸ் உரிமையாளர் மதன், கல்லூரி வேந்தர் பச்சமுத்து ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் பல்கலைக்கழக வேந்தரான பச்சமுத்துவை கடந்த ஆகஸ்டு 26ம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
பின்னர் பச்சமுத்துவுக்கு செஷன்ஸ் நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 8ம் தேதி ஜாமீன் வழங்கியது. மதன் மாயமாகி இன்றுடன் 145 நாட்கள் ஆகிறது. ஆனால் இதுவரை மதன் எங்கு இருக்கிறார் என்ற தகவலும் கிடைக்காமல் மத்திய குற்றப்பிரிவு போலீசார் திணறி வருகின்றனர். இதற்கிடையே மதனின் கூட்டாளி சுதிர் மற்றும் குணாவை போலீசார் கைது செய்தனர். குணாவை போலீசார் நேற்று மூன்று நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் அளித்த தகவலின் அடிப்படையிலும், மதன் மாயமானபோது அதிக நேரம் மயிலாடுதுறையை சேர்ந்த பெண் ஒருவரிடம் பேசியதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, மத்திய குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் ேநற்று அந்த பெண்ணை பிடித்து சென்னை வடபழனியில் உள்ள காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.