தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தல் ஆணையம் எப்படி நியாயமாக நடத்தும்? - ராமதாஸ் அறிக்கை
10/18/2016 3:13:34 PM
சென்னை, - பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை : தஞ்சாவூர், அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டதற்காக தேர்தல் ஆணையம் கூறிய காரணங்கள் அதிர்ச்சியளிப்பவை; ஜனநாயகத்தை இப்படியெல்லாம் படுகொலை செய்ய முடியுமா? என்ற வினாவை எழுப்பக்கூடியவை. இந்த இரு தொகுதிகளிலும் தற்காலிகமாக தேர்தலை ஒத்திவைப்பதால், களச்சூழலில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்றும், காலப்போக்கில் தேர்தல் நடத்துவதற்கான சூழல் ஏற்பட்ட பிறகு தேர்தல் நடத்தப்படும் என்றும் ஆணையம் கூறியிருந்தது. இத்தகைய நிலையில், இப்போது இரு தொகுதிகளிலும் தேர்தலை நடத்துவதற்கான சூழல் நிலவுகிறது என்ற முடிவுக்கு ஆணையம் எந்த அடிப்படையில் வந்தது? என்பது தான் மில்லியன் டாலர் வினாவாகும்.
ஒருவேளை இந்த தேர்தல்களை நியாயமாக நடத்த வேண்டும் என்பது தான் தேர்தல் ஆணையத்தின் உண்மையான நோக்கமாக இருக்குமானால், அதை உறுதி செய்வதற்காக,இரு தொகுதிகளிலும் 10 வாக்குச்சாவடிக்கு ஒரு தேர்தல் பார்வையாளரையும், ஒரு கம்பெனி மத்திய துணை ராணுவப் படையையும் 26ம் தேதி முதல் பணியில் ஈடுபடுத்த வேண்டும். தஞ்சாவூர், கரூர் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களை தேர்தல் அணியிலிருந்து விலக்கி வைக்க வேண்டும். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தலைமை தேர்தல் அதிகாரியாக வெளிமாநிலத்தவரை நியமிக்க வேண்டும். வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டால் உடனடியாக தேர்தல் ஒத்திவைக்கப்படும் அல்லது ரத்து செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரிக்க வேண்டும்.