தஞ்சை, அரவக்குறிச்சி தேர்தல் பழைய வேட்பாளர்களுக்கு தடையா? - ராஜேஷ் லக்கானி விளக்கம்
10/18/2016 3:12:26 PM
சென்னை, - தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 சட்டசபை தொகுதிகளில் நவம்பர் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வரும் 26ம் தேதி தொடங்கும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி இன்று நிருபர்களிடம் கூறியதாவது : மூன்று தொகுதிகளிலும் பணப் புழக்கத்தை தடுக்க பறக்கும்படை மற்றும் கண்காணிப்பு குழுவினர் இன்று முதல் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு பறக்கும்படை, ஒரு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் 12 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் 3 அணியாக பிரிந்து ஒவ்வொரு 8 மணி நேரத்துக்கும் ஒரு அணியாக 24 மணி நேரமும் அந்தந்த தொகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபடுவார்கள்.
வேட்புமனு தாக்கல் நவம்பர் 2ம் தேதி முடிகிறது. நவம்பர் 3ம் தேதி ஒரு தொகுதிக்கு தலா இரண்டு தேர்தல் பார்வையாளர்கள் வெளி மாநிலங்களில் இருந்து வருவார்கள். இவர்கள் வேட்பாளர்களின் செலவுக்கணக்குகளை துல்லியமாக கண்காணிப்பார்கள். ஏற்கனவே இந்த 3 தொகுதிகளிலும் போட்டியிட மனுதாக்கல் செய்தவர்கள், இந்த தேர்தலில் போட்டியிட தேர்தல் ஆணையம் தடை விதிக்கவில்லை.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் இந்த 3 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துவிட்டது. அதனால் புதிய திட்டங்கள் எதுவும் அந்த தொகுதிக்குள் அரசு சார்பில் நடத்தக்கூடாது.
டெல்லியில் நாளை முதல் 3 நாள் நடைபெறும் சர்வதேச தேர்தல் சட்டம் மற்றும் விழிப்புணர்ச்சி மாநாட்டில் பங்கேற்க இன்று மாலை நான் டெல்லி செல்கிறேன். வரும் சனிக்கிழமை தலைமை தேர்தல் ஆணையர்களை சந்திக்கவுள்ளேன். அப்போது தமிழகத்தில் 3 தொகுதிகளுக்கும் நடைபெறும் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தெரிவிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.