தீபாவளி பண்டிகை ரிலீஸ் கார்த்தியுடன் போட்டியிலிருந்து ஹீரோக்கள் விலகியது ஏன்?
10/18/2016 2:13:36 PM
ஒரு மாதத்துக்கு முன்பு தீபாவளி தினத்தில் சூர்யா நடிக்கும் எஸ் 3, விஷால் நடிக்கும் கத்தி சண்டை, கார்த்தி நடிக்கும் காஷ்மோரா, தனுஷ் நடிக்கும் கொடி, ஜி.வி.பிரகாஷின் கடவுள் இருக்கான் குமாரு என 5 படங்கள் போட்டியில் குதிக்கும் என்று கூறப்பட்டு வந்தது. தற்போது ஒவ்வொரு படமாக போட்டியிலிருந்து விலகி 2 படங்கள் மட்டுமே போட்டி களத்தில் நிற்கிறது.
தம்பி கார்த்தி படத்துடன் மோதுவதை தவிர்க்கும் விதமாக எஸ் 3 படத்தின் ரிலீஸை ஏற்கனவே தள்ளி வைத்துவிட்டார் சூர்யா. நடிகர் சங்கத்தில் பொதுச் செயலாளர், பொருளாளர் என்று இணைந்து செயல்படுகின்றனர் விஷால், கார்த்தி. அந்த நட்புக்கு சாட்சியாக விஷாலும் கார்த்தி படத்துடனான மோதலை தவிர்க்கும் விதமாக கத்தி சண்டை பட ரிலீஸை தீபாவளி தினத்திலிருந்து தள்ளி வைத்துவிட்டார். அதேபோல் ஜி.வி.பிரகாஷ் படமும் தள்ளிவைக்கப்பட உள்ளது. நடிகர் சங்க பொருளாளரான கார்த்தியுடன் தங்களது படம் மோதுவதை மற்ற ஹீரோக்கள் விரும்பவில்லையாம். அதனால்தான் அந்த படங்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.சில வாரங்களுக்கு முன் 5 படத்துக்கும் தீபாவளி தினத்தில் தியேட்டர் கிடைக்குமா என்ற பேச்சு நிலவிய நிலையில் தற்போது காஷ்மோரா, கொடி என 2 படம் மட்டுமே ரிலீஸ் ஆக உள்ளது. குறைந்த அளவிலான போட்டியை பயன்படுத்திக்கொள்ளும் வகையில் ஆனந்த் நடித்துள்ள கடலை படத்தை கூடுதல் இணைப்பாக தீபாவளிக்கு திரையிட அப்பட தரப்பு பேச்சு நடத்தி வருகிறதாம்.