வேலை வாங்கி தருவதாக மோசடி - பெண்ணை எரித்து கொன்ற பாதிரியார் 30 பேரை ஏமாற்றி பலாத்காரம்; போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்
10/5/2025 3:09:39 PM
சங்கரன்ேகாவில், -சங்கரன்கோவில் பெண்ணை எரித்து கொன்ற பாதிரியார் 30க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி பலாத்காரம் செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரை மீண்டும் காவலில் எடுக்க முடிவு செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் மானூர் உக்கிரன்கோட்டையை சேர்ந்தவர் மிலன்சிங்(46). மாற்றுதிறனாளியான இவர், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகேயுள்ள நரிப்பையூரில் பாதிரியராக இருந்து வந்தார். இவருடைய மனைவி ஜீவிதா (40).
மிலன்சிங் கடந்த 6 மாதங்களுக்குமுன் நெல்லை பாளையங்கோட்டை சாந்திநகரை சேர்ந்த காசிநாராயணன் மகள் காந்திமதி(30) என்பவருக்கு அரசு வேலை வாங்கி தருவதாககூறி, அவரிடம் 15 பவுன் நகை, ரூ.4.5 லட்சம் ஆகியவற்றை பெற்றுக்கொண்டு வேலை வாங்கித்தராமல் ஏமாற்றி வந்தார்.
இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன் காந்திமதியை தொடர்பு கொண்ட மிலன்சிங், சங்கரன்கோவிலில் வேலைக்கு ஏற்பாடு செய்திருப்பதாககூறி அவரை காரில் அழைத்து சென்றார். அங்குள்ள சார்பதிவாளர் அலுவலகம் முன்பு சென்றபோது காரில் இருந்த காந்திமதியை திடீரென சாலையில் உருட்டி விட்டு மிலன்சிங் அங்கிருந்து தப்பினார்.இதுகுறித்து காந்திமதி, போலீசில் புகார் செய்தார். சங்கரன்கோவில் டவுன் போலீசார், மிலன்சிங்கை கைது செய்து பாளை சிறையில் அடைத்தனர். பின்னர் அவரை காவலில் எடுத்து விசாரித்தனர். இதில் மிலன்சிங், பல பெண்களிடம் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்த விவரம் வருமாறு:
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் ஜெ.டி.நகரை சேர்ந்த ஞானம் மகள் அன்புச்செல்லம்(24). இவர் சங்கரன்கோவில் அருகே தனியார் கல்லூரியில் படித்தபோது வீரிருப்பை சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. தனியார் மில்லில் வேலை பார்த்து வந்த அந்த வாலிபர், அவரை காதலிப்பதாக கூறி அவரிடம் இருந்து நகை, பணத்தை பெற்றுக்கொண்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றி விட்டார்.இந்நிலையில் பாதிரியார் மிலன்சிங், சங்கரன்கோவில் ஜெ.டி.நகரில் மத பிரசாரத்திற்கு சென்றபோது அன்புசெல்லத்தை சந்தித்தார். அப்போது அன்புசெல்லம், தன்னை வாலிபர் ஏமாற்றி நகை, பணத்தை பறித்த விபரத்தை தெரிவித்தார். அப்போது அவருக்கு பாதிரியார் ஆறுதல்கூறி அரசு வேலை வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறினார்.
இதையடுத்து அன்புசெல்லம், பாதிரியாரிடம் ரூ.2 லட்சம் கொடுத்தார். பின்னர் அந்த பெண்ணை தர்மபுரிக்கு அழைத்து சென்று அங்கு 2 ஆண்டுகள் தங்கியிருந்து ஊழியம் செய்தார். அப்போது அன்புசெல்லத்திடம் பாதிரியார் மிலன்சிங் நெருங்கி பழகினார். இதில் அன்புசெல்லம் 4 மாத கர்ப்பிணியானார். இதையடுத்து பாதிரியாரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறினார். ஆனால் அவர், மறுத்ததோடு அன்புசெல்லத்தை கொலை செய்ய திட்டம் தீட்டினார். இதற்கு பாதிரியார் மனைவி ஜீவிதாவும் உடந்தையாக இருந்தார்.பின்னர் அன்புசெல்லத்தை, மிலன்சிங் காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று அவரை எரித்து கொலை செய்து காவேரிபாக்கம் நான்குவழிச்சாலையில் உடலை வீசி சென்றார். இதனிடையே அன்புசெல்லத்தை காணவில்லை என அவரது தந்தை ஞானம், குருவிகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில் பாதிரியார் மிலன்சிங், அன்புசெல்லத்தை கொன்று உடலை வீசியிருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக காவேரிப்பாக்கம் போலீசாருக்கு குருவிகுளம் போலீசார் தகவல் தெரிவித்தனர். அவர்கள் சங்கரன்கோவில் வந்து மிலன்சிங் மனைவி ஜீவிதாவிடம் விசாரணை நடத்தினர். மேலும் அவரை காவேரிபாக்கத்திற்கு அழைத்து சென்றனர்.
பாதிரியார் மிலன்சிங் இதேபோல் நெல்லை, பாளை, அம்பை, வி.கே.புரம் பகுதியில் 30க்கும் மேற்பட்ட பெண்களிடம் வேலை வாங்கி தருவதாககூறி மோசடி செய்திருப்பதுடன், பலரை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இதுதொடர்பாக தற்போது பாளை மத்திய சிறையில் இருக்கும் மிலன்சிங்கை போலீசார் மீண்டும் காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் எனத் தெரிகிறது.