குட்டையில் மூழ்கி 2 மாணவர்கள் சாவு - ஆவடி அருகே பரிதாபம்
9/30/2016 3:00:19 PM
ஆவடி, -ஆவடி அருகே மழைநீர் குட்டையில் மூழ்கி மாணவர்கள் 2 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியது. சென்னை அம்பத்தூர் அருகே ஒரகடம், பத்மாவதி சீனிவாசன் நகர், ஜி.கே.தெருவை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகன் பிரசாந்த் (15). இவன் ஆவடியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தான். அண்ணா தெருவை சேர்ந்தவர் பாபு. இவரது மகன் பிரசாந்த் (16). இவன் திருமுல்லைவாயல், சத்தியமூர்த்தி நகரில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தான்.
தற்போது காலாண்டு தேர்வு விடுமுறை என்பதால், மாணவர்கள் இருவரும் நண்பர்களை பார்க்க சென்றுள்ளனர். இதன்படி கடந்த 27ம் தேதி வீட்டிலிருந்து பைக்கில் சென்றவர்கள் இரவு வரை வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் மாணவர்களை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், ஆவடி அருகே பொத்தூர், வள்ளிவேலன் நகரில் உள்ள மழைநீர் குட்டையில் 2 பேர் இறந்துகிடப்பதாக ஆவடி டேங்க் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். குட்டையில் மிதந்த 2 சிறுவர்களின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது இறந்த 2 பேரும் மாணவர்கள் என்று தெரியவந்தது. பெற்றோர்களும் வந்து அடையாளம் காட்டி தங்களது மகன்கள் என்று உறுதிப்படுத்தினர்.
மழைநீர் குட்டையில் மூழ்கி மாணவர்கள் 2 பேர் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.