ஒருதலை காதலால் ஏற்படும் - கொலைகளை தடுக்க கவுன்சிலிங் தேவை ; இல.கணேசன் பேட்டி
9/21/2016 3:24:30 PM
திருப்பூர், -தமிழகத்தில் தேச விரோத செயல்கள் தலைதூக்க துவங்கி விட்டதாக பாஜ தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்தார்.உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம், திருப்பூர் பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்க வந்திருந்த பா.ஜ தேசிய ெசயற்குழு உறுப்பினர் இல.கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது:
காவிரி பிரச்னையில் தற்போது தமிழகத்திற்கு சாதகமான சூழ்நிலை உள்ளது. ஆகவே தமிழகத்தில் உள்ளவர்கள் அமைதி காக்க வேண்டும். காவிரி பிரச்னைக்கு நிரந்தர தீர்வு நதிநீர் இணைப்பு தான். தமிழகத்தில் உள்ள நதிகளை ஒன்றோடு ஒன்று இணைக்க அரசு முயற்சி எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் ஒரு தலை காதல் கொலைகள் நடந்து வருகிறது. இதுபோன்ற சம்பவங்களை தடுக்க கல்வி நிலையங்களிலும், வீடுகளிலும் ‘கவுன்சலிங்’ வழங்க வேண்டும்.
கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் தேச விரோத செயல்கள் தலைதூக்க துவங்கி விட்டது. திருப்பூரில் இந்து முன்னணி பிரமுகர் சண்முகம் பனியன் நிறுவனத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு, வேலூர், திண்டுக்கல், ஓசூர் உள்ளிட்ட இடங்களில் இந்து இயக்க பிரமுகர்கள் மீது தாக்குதல் என தொடர்ந்து நடந்து வருகிறது. ஆடிட்டர் ரமேஷ், வெள்ளையன் ஆகியோர் கொலை செய்யப்பட்டபோதே, குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்திருந்தால், தற்போது இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்காது. இவ்வாறு இல.கணேசன் கூறினார்.