கோவையில் ₹3.90 கோடியுடன் கார் கடத்தலில் திருப்பம் - இன்ஸ்பெக்டர், எஸ்ஐ 2 ஏட்டுகளுக்கு தொடர்பு? ; தனிப்படை தீவிர விசாரணை
9/21/2016 3:22:39 PM
கோவை, -கோவை அருகே ரூ.3.90 கோடியுடன் கார் கடத்தப்பட்ட வழக்கில் சந்தேகத்தின்பேரில் 3 பேரை தனிப்படையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் கரூரை சேர்ந்த இன்ஸ்பெக்டர், எஸ்ஐ மற்றும் 2 ஏட்டுகளுக்கு ெதாடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர் அன்சர் சாதாத் (35). நகை வியாபாரி. இவரது நகை கடையில் ஊழியராக பணியாற்றும் முகமது (53), முஷீர் (35), சிதோஷ் (32), கார் டிரைவர் ஆனந்த் (29) ஆகியோர் கடந்த ஆகஸ்ட் 25ம் ேததி சென்னையில் இருந்து கோவை வழியாக பாலக்காடு நோக்கி காரில் சென்றுகொண்டிருந்தனர்.
மதுக்கரை நீலம்பூர் பைபாஸ் ரோட்டில், ஈச்சனாரி சுங்க வரி வசூல் மையம் தாண்டி சில மீட்டர் தூரத்தில் போலீஸ் சீருடையில் இருந்த 4 பேர் அந்த காரை மடக்கி விசாரித்தனர். பின்னர் அவர்கள் காரில் இருந்தவர்களை இறக்கி விட்டுவிட்டு காரை கடத்தினர். காரில் 3.90 கோடி ரூபாய் இருந்ததாக கூறப்பட்டது. கார் கடத்தப்பட்டது குறித்து நகைக்கடை அதிபர் அன்சர் சாதாத், மதுக்கரை போலீசில் புகார் அளித்தார். எஸ்.பி ரம்யா பாரதி உத்தரவின் பேரில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் கடத்தப்பட்ட காரை பாலக்காட்டில் வைத்து தனிப்படை போலீசார் கைப்பற்றி கோவைக்கு கொண்டு வந்தனர்.
இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் சுபாஷ், சுதீர், சதிக் ஆகிய 3 வாலிபர்களை தனிப்படை போலீசார் நேற்று பிடித்தனர். பிடிபட்டவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். கொள்ளையடிக்கப்பட்ட பணம் குறித்தும் அவர்களிடம் விசாரணை நடந்தது. காரில் கடத்தப்பட்டது ஹவாலா பணம் என்பது உறுதியானது. மேலும் இந்த கடத்தலில் கரூர் மாவட்டம் பரமத்தி பகுதியை சேர்ந்த இன்ஸ்பெக்டர், குளித்தலை பகுதியை சேர்ந்த எஸ்ஐ மற்றும் 2 ஏட்டுகளுக்கு தொடர்பிருப்பதாக 3 பேரும் கூறியது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனுமதி அளித்த பிறகே சம்பந்தப்பட்ட போலீசாரிடம் விசாரிக்கப்படும் என தனிப்படையினர் தெரிவித்தனர். இதன்மூலம் மேலும் பல தகவல்கள் வெளியாகலாம்.'