‘எங்களுக்கு யாரிடமும் சர்டிபிகேட் தேவையில்லை’ - சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் காட்டம்
9/21/2016 3:21:17 PM
புதுடெல்லி, - ‘எங்களுக்கு யாரிடம் இருந்தும் சர்டிபிகேட் தேவையில்லை’ என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் நேற்று ஒரு வழக்கு விசாரணையின் போது கோபமாக குறிப்பிட்டனர். நீதிபதிகளை நியமிப்பதற்கு சுதந்திரமான அமைப்பு ஏற்படுத்த வேண்டுமென்று கோரி, ‘வெளிப்படையான நீதித்துறைக்கான தேசிய வழக்கறிஞர்கள் அமைப்பு’ என்ற சங்கத்தின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘‘உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் பாரபட்சம் காட்டப்படுகிறது. சிபாரிசுகளின் அடிப்படையில் நியமனங்கள் நடக்கின்றன. எனவே, நேர்மையான, சுதந்திரமான அமைப்பு மூலம் நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும்’’ என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, யு.யு.லலித் ஆகியோர் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில், வக்கீல்கள் மாத்யூ நெடும்பரா, ஏ.சி.பிலிப் ஆகியோர் ஆஜராகி, நீதிபதிகளின் உறவினர்கள், நீதிபதிகளாக நியமிக்கப்படுவதாக குற்றம்சாட்டினர். இதனால், நீதிமன்ற நம்பகத்தன்மை பாதிக்கப்படுவதாக கூறினர். மேலும், நீதிபதிகள் நியமன நடைமுறை தொடர்பாக மத்திய அரசுக்கும், உச்ச நீதிமன்றத்துக்கும் இடையே நடக்கும் மோதல் பற்றி குறிப்பிட்டனர். இதைக் கேட்டு விட்டு நீதிபதிகள் கூறுகையில், ‘‘நீதிபதிகள் நியமன நடைமுறை இன்னும் அமலுக்கு வரவில்ைல. அதற்குள் ஏன் அதை பற்றி பேச வேண்டும். எங்களுக்கு யாரிடம் இருந்தும் சர்டிபிகேட் தேவையில்லை. உங்கள் கருத்து நல்லதாகவோ, கெட்டதாகவோ இருக்கலாம், அதை பற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை. உங்கள் யோசனை அரசமைப்புச் சட்டத்தை திருத்துவதற்கு ஒப்பான நடவடிக்கை, இதை உச்ச நீதிமன்றத்தால் செய்ய இயலாது’’ என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.
மத்தியில் பாஜ ஆட்சிக்கு வந்த பிறகு, தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் என்ற புதிய அமைப்பை கொண்டு வந்தது. இதுதொடர்பாக புதிய சட்டத்தையும் இயற்றியது. ஆனால், இந்த சட்டத்தையும், தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.