உரி தாக்குதலுக்கு பாகிஸ்தான் காரணம் - ராகுல் காந்தி குற்றம் சாட்டு
9/21/2016 3:20:46 PM
கான்பூர், - உரியில் உள்ள ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பாகிஸ்தானே காரணம் என்று காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். உத்தரப் பிரதேசத்தில் கிஷான் யாத்திரை நடத்தி வரும் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி, கான்பூரில் நிருபர்களிடம் கூறியதாவது: உரி ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பின்னணியில் பாகிஸ்தான் உள்ளது. இது கண்டிக்கத்தக்கது. பயங்கரவாதத் தாக்குதலுக்கு முதல் காரணம், பாகிஸ்தான் அரசு ஆகும். இரண்டாவதாக, மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசின் அரசியலும், இந்தத் தாக்குதலுக்கு காரணமாகும்.
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, காஷ்மீரில் 9 ஆண்டுகள் போராடி பயங்கரவாதத்தைக் கட்டுக்குள் வைத்திருந்தது. ஆனால், ஜம்மு-காஷ்மீரை ஆளும் பாஜக-பிடிபி கூட்டணி, அந்த மாநிலத்தில் பயங்கரவாதத்துக்கு இடமளித்து விட்டது.
நான் சில மாதங்களுக்கு முன்பே மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியிடம், ‘காஷ்மீரில் நீங்கள் பெரிய பிரச்னைகளை சந்திக்கப் போகிறீர்கள்’ என்று கூறினேன். காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசுக்கு தெளிவான கொள்கை கிடையாது. பிரதமர் மோடி இந்த விவகாரத்தை சரியாக கையாளவில்லை.இவ்வாறு ராகுல்காந்தி கூறினார்.