இந்திய - இஸ்ரேல் கூட்டு தயாரிப்பான அதிநவீன பராக் ஏவுகணை 2வது நாளாக சோதனை
9/21/2016 3:19:12 PM
பாலாசோர், - இஸ்ரேல் கூட்டுத் தயாரிப்பில் உருவான அதிநவீன பராக்-8 ஏவுகணை இரண்டாவது நாளாக இன்று சோதனை செய்யப்படுகிறது.இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) மற்றும் இஸ்ரேல் விண்வெளி ஆய்வு நிறுவனம் இணைந்து பராக்-8 என்ற அதிநவீன ஏவுகணையை உருவாக்கியுள்ளன. தரையிலிருந்து சென்று வான்வெளியில் உள்ள இலக்குகளை துல்லியமாகத் தாக்கும் வகையில் இந்த ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் சோதனையை பல்வேறு கட்டங்களாக நடத்த விஞ்ஞானிகள் திட்டமிட்டனர். அதன்படி, ஒடிசா மாநிலம் சண்டிப்பூரில் உள்ள ஏவுதளத்தில் நேற்று காலை 10.13 மணிக்கு ஏவுகணை விண்ணில் ஏவப்பட்டது. அப்போது, குறிப்பிட்ட தூரத்தில் நிலைநிறுத்தப்பட்டிருந்த அனைத்து இலக்குகளையும் ஏவுகணை துல்லியமாகத் தாக்கியது. இதன் மூலம் இந்தச் சோதனையானது வெற்றிபெற்றதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
ஏற்கனவே, கடந்த ஜூன் 30ம் தேதி, ஜூலை 1ம் தேதி ஆகிய இருநாட்களில் பராக்-8 ஏவுகணை விண்ணில் செலுத்தி சோதனை செய்யப்பட்டிருந்தது. அதே போல், இந்தியா - இஸ்ரேல் கூட்டுத் தயாரிப்பில் உருவான எம்ஆர்-சாம் ரக ஏவுகணைகளின் பரிசோதனை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இந்த ஏவுகணைகள் நடுத்தர ரக ஏவுகணைகளாகும். இந்நிலையில், பராக்-8 ஏவுகணையை இன்றும் அதே தளத்தில் இருந்து விஞ்ஞானிகள் சோதனை செய்து பார்க்க உள்ளனர். இந்த பராக்-8 ஏவுகணையானது, கூடுதல் தொலைவில் உள்ள இலக்குகளையும் வீழ்த்தும் திறன் கொண்டது. இந்த வகை ஏவுகணைகளின் செயல்பாடுகள், செல்லும் தடங்கள் உள்ளிட்டவற்றை தரையிலிருந்தபடி கண்காணிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.