சேலத்தில் ஏடிஎம் இயந்திரத்தை துளையிட்டு கொள்ளை முயற்சி
9/21/2016 3:18:38 PM
சேலம், -சேலம் ராமகிருஷ்ணாரோட்டில் அரசு போக்குவரத்து கழக டெப்போ செயல்பட்டு வருகிறது. வெளிஊர்களுக்கு செல்லும் பஸ்கள் 24 மணிநேரமும் வருவதும், போவதுமாகவே இருக்கும். இதன் எதிர் பகுதியில் பாரத ஸ்டேட் வங்கி செயல்பட்டு வருகிறது. ரோட்டை ஒட்டிய பகுதியில் ஏடிஎம் மையம் அமைக்கப்பட்டுள்ளது. 2 மிஷனில் பணத்தை டெபாசிட் செய்யவும், 2 மிஷினில் பணத்தை எடுக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது.இந்த மையத்தின் இரவு காவலாளியாக ராமசாமி (63) என்பவர் பணியாற்றி வருகிறார். வெளிப்பகுதியில் இருக்கும் அவர், இன்று காலை 5.30 மணிக்கு ஏடிஎம் மையத்திற்குள் சென்றார். அங்கு ஏடிஎம் மிஷினின் கீழ்பகுதி வெட்டப்பட்டு இருந்தது. மிஷின் முழுவதும் மிளகாய் பொடி தூவப்பட்டு கிடந்தது.
இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசாரும், வங்கி அதிகாரிகளும் வந்து பார்வையிட்டனர். கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு பதிவாகியிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். பின்னர் வெட்டப்பட்ட ஏடிஎம் மிஷினை அதிகாரிகள் திறந்து பார்த்தனர். அதில் ரூ.10 லட்சம் இருந்தது.நள்ளிரவில் ஏடிஎம் மையத்திற்குள் புகுந்த ஆசாமிகள், அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை உடைத்துள்ளனர். அதன்பிறகு ஏடிஎம் மிஷினை துளையிட்டுள்ளனர். ஆனால் அவர்களால் பணம் இருக்கும் பகுதியை தொடமுடியவில்லை. பின்னர் மிளகாய்பொடியை தூவிவிட்டு சென்றுள்ளனர். இந்த கொள்ளையில் 2க்கும் மேற்பட்ட ஆசாமிகள் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சேலத்தில் இருந்து சென்னைக்கு பணம் கொண்டு சென்ற ரயிலில் மேற்கூரையை துளையிட்டு ₹5.78 கோடி கொள்ளை நடந்தது. அதைபோலவே இந்த ஏடிஎம் மிஷினிலும் துளையிடப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் மக்கள் நடமாட்டம் இருக்கும் ஏடிஎம் மையத்தில் நடந்த இந்த கொள்ளை முயற்சி சம்பவம் போலீசாருக்கு பெருத்த சவாலாகவே கருதப்படுகிறது.