2ம் கட்ட மருத்துவ கவுன்சலிங் தொடங்கியது
9/21/2016 3:17:57 PM
சென்னை, - இரண்டாம் கட்ட மருத்துவ கவுன்சலிங் இன்று காலை தொடங்கியது. தரவரிசையில் முதல் 3 ஆயிரத்து 334 பேர்கவுன்சலிங்கில் கலந்துகொள்ள தகுதிபெற்றுள்ளனர்.தமிழகத்தில் எம்பிபிஎஸ் பிடிஎஸ் படிப்புகளில் சேர்வதற்கான முதல்கட்ட கவுன்சலிங் ஜூன் மாதம் 20ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடந்தது. அதைதொடர்ந்து ஒரு மாத இடைவெளியில் இரண்டாம் கட்ட கவுன்சலிங் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தமிழக அரசு அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வு முடிந்து மாநில அரசுகளிடம் சீட் திரும்ப ஒப்படைக்கப்பட்டவுடன் செப்டம்பர் 21ம் தேதி கவுன்சலிங் நடத்தப்படும் என்று அறிவித்தது. இதன்மூலம் தேவையில்லாத காலதாமதம் ஏற்பட்டது. சில மாணவர்கள் இன்ஜினியரிங் உட்பட வேறு படிப்புகளில் சேர்ந்து விட்டனர்.
அதைதொடர்ந்து இன்று காலை ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் தொடங்கிய கவுன்சலிங்கில் கலந்துகொள்ள மாணவர்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்படவில்லை. மருத்துவகல்வி இயக்கக வெப்சைட்டில் மட்டும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. கட் ஆப் மதிப்பெண் 200 முதல் 195.33 வரை பெற்ற 3 ஆயிரத்து 334 மாணவர்களுக்கு காலை 9 மணி, 11 மணி, 2 மணி என 3 பிரிவுகளாக கவுன்சலிங் நடந்து வருகிறது.