கன்னியாகுமரி அருகே பரபரப்பு - கடலில் மிதந்து வந்த மர்ம படகு
9/21/2016 3:12:51 PM
கன்னியாகுமரி, - கன்னியாகுமரி அருகே மீன் வலையுடன் கடலில் மிதந்த மர்ம படகால் பரபரப்பு ஏற்பட்டது.கன்னியாகுமரி சுனாமி காலனியை சேர்ந்தவர் ஜேசு அந்தோணி. இவருக்கு சொந்தமான படகில் கன்னியாகுமரியை சேர்ந்த ராஜன், அரசாங்கம், செல்வம் ஆகியோர் நேற்று அதிகாலை கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். கரையில் இருந்து 4 கடல் மைல் தூரத்தில் அவர்கள் சென்று கொண்டிருந்த போது, அப்பகுதியில் படகு ஒன்று மிதந்து கொண்டிருந்தது. அதில், மீன் வலைகளும் காணப்பட்டன. ஆனால், மீனவர்கள் யாரும் இல்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த அவர்கள் தொழிலுக்கு செல்லாமல் அந்த மர்ம படகை கயிற்றால் கட்டி, கரைக்கு இழுத்து வந்தனர். மேலும், கன்னியாகுமரி பங்குத்தந்தை நசரேனிடம் சம்பவம் குறித்து தெரிவித்தனர். அவர் உடனடியாக கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாயஜோஸ், ஏட்டு நீலமணி மற்றும் போலீசார் சம்பவ இடம் வந்து படகை மீட்டனர். பின்னர் இது குறித்து விசாரணை நடத்தினர். இதில் அந்த படகு கடியபட்டணத்தை சேர்ந்த பங்குதாஸ்(58) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. மேலும் கடியப்பட்டணம் கடற்கரையில் படகை கட்டி வைத்திருந்தபோது காற்றில் அடித்து செல்லப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து படகு பங்குதாஸிடம் ஒப்படைக்கப்பட்டது.