நியூசிலாந்துடன் முதல் டெஸ்ட் நாளை துவக்கம் - 500வது போட்டியில் சாதிக்கும் முனைப்பில் இந்தியா
9/21/2016 3:09:08 PM
கான்பூர்: நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதலில் நடக்கும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கான்பூர் கிரீன்பார்க் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. ெடஸ்ட்டில் இருந்து டோனி ஓய்வுக்கு பின்பாக, விராட் கோஹ்லி தலைமையில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடைசியாக விளையாடிய 3 தொடர்களில் இலங்கை, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளை இந்தியா வீழ்த்தியுள்ளது. இந்தியாவின் அனைத்து வீரர்களும் நல்ல பார்மில் உள்ளனர். கடைசி 8 டெஸ்ட்டில் லோகேஸ் ராகுல் 3 சதம் அடித்துள்ளார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ெதாடரில் கேப்டன் விராட் கோஹ்லி, தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார். அஸ்வின் சுழல், நியூசிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு சவால் அளிக்கும். இதனுடன் அமித் மிஸ்ரா, சமி, புவனேஸ்வர் குமார் இருப்பதும் பலம்.
ஆனால் நியூசிலாந்து அணியோ சமீபத்தில் ஜிம்பாப்வேவுக்கு எதிராக வெற்றி பெற்றிருந்தாலும், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக தோல்வியை தழுவியது. ஜிம்மி நீஷம், டிம் சவுத்தி உள்ளிட்ட வீரர்கள் காயத்தால் விலகியிருப்பதும் நியூசிலாந்துக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் இந்தியாவின் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, சிக்குன் குனியா காரணமாக முதல் டெஸ்ட்டில் விளையாடமாட்டார். ஏறத்தாழ 4 ஆண்டுகளுக்கு பிறகு நியூசிலாந்துடன் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இந்தியா, வெற்றியுடன் தொடங்க முயலும். அதே சமயம் நியூசிலாந்து அணியும் கடும் சவால் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், கிரிக்கெட் ரசிகர்களுக்கு விறுவிறுப்பான போட்டி காத்திருக்கிறது.
இந்தியாவில் தடுமாறும் நியூசிலாந்து: இந்திய மண்ணில் நியூசிலாந்து தொடர்ச்சியாக தடுமாறியே வருகிறது. இந்தியாவில் இதுவரை 10 தொடர்களில் விளையாடியுள்ள நியூசிலாந்து, 8 தோல்வி, 2 டிரா கண்டுள்ளது. வெற்றி பெற்றதில்லை. மொத்தமாக இந்திய மண்ணில் 31 டெஸ்ட் ேபாட்டிகளில் விளையாடியுள்ள நியூசிலாந்து, 13 தோல்வி, 16 டிரா கண்டுள்ளது. 2 வெற்றி மட்டுமே பெற்றுள்ளது.
சாதிக்க காத்திருக்கும் அஸ்வின்: இந்திய மண்ணில் ெதாடர்ந்து சாதித்து வரும் அஸ்வின், தற்போது 36 ெடஸ்டுகளில் 193 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். முதல் டெஸ்டில் 7 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றும் பட்சத்தில், 200 விக்கெட்டுகளை விரைவாக கைப்பற்றிய ஆசிய பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெறுவார். முன்னதாக பாகிஸ்தானின் வக்கார் யூனுஸ், 38 போட்டிகளில் 200 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
மார்டின் குரோவ் சாதனை உடையுமா? நியூசிலாந்து சார்பில் டெஸ்ட்டில் அதிக சதம் அடித்த வீரர் என்ற பெருமையை 17 சதங்களுடன் மார்டின் குரோவ் பெறுகிறார். தற்போது கேப்டன் கேன் வில்லியம்சன் 16, ரோஸ் டெய்லர் 15 சதங்களை அடித்துள்ளனர். இவர்கள் இருவரும் மார்டின் குரோவின் சாதனையை இந்த ெதாடரில் முறியடிக்க வாய்ப்புள்ளது.
500வது டெஸ்ட்: கான்பூர் போட்டி இந்தியாவின் 500வது டெஸ்ட் ஆகும். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் மட்டுமே 500க்கும் மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்றுள்ளன. 500வது டெஸ்ட் மைல்கல்லை எட்டும் 4வது அணி என்ற பெருமையை இந்தியா பெறுகிறது. இதனால் இந்த போட்டிக்காக சிறப்பு ஏற்பாடுகளை பிசிசிஐ செய்துள்ளது. டாஸ் போடுவதற்கு பிரத்யேக வெள்ளி நாணயம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் 2 ஆயிரம் ஏழை மாணவ, மாணவிகளுக்கு போட்டியை காண அனுமதி வழங்கப்படுகிறது. அவர்களின் டி-சர்ட்டில் ‘500வது டெஸ்ட்’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருக்கும். முன்னாள் கேப்டன்கள் கவுரவிக்கப்பட உள்ளனர். சச்சின், அசாருதீன், காந்த், வெங்கர்ச்சார் ஆகியோர் இதில் கலந்து கொள்வதை உறுதி செய்துள்ளனர். ஆனால் பிஷன் சிங் பேடி, குண்டப்பா விஸ்வநாத் ஆகிய இருவரும் அழைக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.