சித்தோடு அருகே கர்நாடக சரக்கு லாரிக்கு தீவைத்த 4 பேர் கைது
9/21/2016 3:03:04 PM
பவானி, -சித்தோடு அருகே கர்நாடக மாநிலப் பதிவெண் கொண்ட லாரிக்கு தீ வைத்த கும்பலைச் சேர்ந்த நால்வரைப் போலீசார் நேற்று கைது செய்தனர்.சத்தியமங்கலம் திருநகர் காலனியை சேர்ந்தவர் சேகர். இவருக்குச் சொந்தமான லாரியில் மும்பையிலிருந்து ஜவுளி உள்ளிட்ட பொருட்களை ஏற்றிக் கொண்டு மேட்டுப்பாளையம் காரமடையைச் சேர்ந்த டிரைவர் சுரேஷ் (37) ஓட்டிச் சென்றார். கடந்த 15-ம் தேதி இரவு சித்தோடு அருகே சென்றபோது காரில் வந்த மர்ம கும்பல், லாரிக்குத் தீ வைத்துவிட்டுத் தப்பியோடியது. இதில், ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருள்கள், மற்றும் லாரி எரிந்து சேதமடைந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். காவிரி பிரச்னையில் தமிழர்கள் கர்நாடகத்தில் தாக்கப்பட்டதால் கோபத்தில் தீ வைத்திருக்கலாம் எனக் கருதி விசாரணை நடத்தினர்.சந்தேகத்தின்பேரில் சித்தோடு ராவுத்தகவுண்டர் மகன் கணபதி (33) என்பவரிடம் விசாரிக்கையில், நண்பர்களுடன் சேர்ந்து அவர் லாரிக்கு தீ வைத்தது தெரிந்தது. இதையடுத்து, கோவை ஒண்டிப்புதூரைச் சேர்ந்த பிரதீப்குமார் (34), கவுந்தப்பாடி பச்சாக்கவுண்டனூரைச் சேர்ந்த செல்வராஜ் (32), சித்தோடு கரும்புக்காட்டைச் சேர்ந்த சதீஷ்குமார் (37) ஆகியோரை கைது செய்தனர்.