கட்சித் தலைவரானார்: கத்தியை தீட்டினார் - அகிலேஷ் ஆதரவாளர்கள் 7 பேர் நீக்கம் ; சிவ்பால் யாதவ் அதிரடி
9/20/2016 3:07:11 PM
லக்னோ, - உ.பி.யில் முதல்வர் அகிலேஷ் யாதவ் ஆதரவு எம்.எல்.சி.க்கள் உள்பட 7 பேரை கட்சியில் இருந்து நீக்கி மாநில தலைவரான சிவ்பால் யாதவ் அறிவிப்பு வெளியிட்டார். இதையடுத்து, சமாஜ்வாடி கட்சிக்குள் மீண்டும் மோதல் வெடித்துள்ளது.
உத்தரபிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாடி கட்சித் தலைவரான முலாயமின் மகன் அகிலேஷ் யாதவ் முதல்வராக உள்ளார். இவர் கட்சியின் மாநில தலைவர் பதவியையும் வகித்து வந்தார். அவருடைய சித்தப்பாவும், முலாயமின் தம்பியுமான சிவ்பால் யாதவ் முக்கிய அமைச்சராக இருந்தார். அகிலேஷுக்கும், சிவ்பால் யாதவுக்கும் இடையே மோதல் நிலவி வந்தது. இந்நிலையில், அகிலேஷிடம் இருந்து கட்சியின் மாநில தலைவர் பதவியை பறித்து, சிவபால் யாதவிடம் முலாயம் கொடுத்தார். இதில் கோபமான அகிலேஷ், அமைச்சர் பதவி வகித்த சிவ்பால் யாதவிடம் இருந்து முக்கிய இலாகாக்களை பறித்தார். இதனால், உட்கட்சி மோதல் பகிரங்கமாக வெடித்து பரபரப்பை ஏற்படுத்தியது.
இதன்பின்னர், முலாயம் அவர்கள் இருவரையும் அழைத்து பேசி பிரச்னையை தீர்த்து வைத்தார். இதில் சமரசம் ஏற்பட்டது. சிவ்பால் யாதவிடம் மீண்டும் முக்கிய இலாகாக்கள் ஒப்படைக்கப்பட்டன. மாநிலத் தலைவர் பதவியும் அளிக்கப்பட்டது. இதனால், இருவருக்கும் இடையே பனிப்போர் முடிவுக்கு வந்து விட்டதாக கருதப்பட்டது
இந்நிலையில், அகிலேஷ் யாதவின் ஆதரவாளர்களும் எம்.எல்.சி.யாக உள்ளவர்களுமான ஆனந்த் பாதுரியா, சுனில் யாதவ் சஞ்சன், சஞ்சய் லத்தார் மற்றும் சமாஜ்வாடி இளைஞர் அணி தலைவர்கள் கவுரவ் துபே, முகமது இபாத், பிரஜேஷ் யாதவ், மாணவரணி தலைவர் திக்விஜய்சிங் தியோ ஆகிய 7 பேரையும் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி, மாநிலத் தலைவர் சிவ்பால் நேற்று நீக்கம் செய்தார். இவர்கள் 7 பேரும் தங்களுடைய ஆதரவாளர்களுடன் கடந்த சனிக்கிழமை முலாயம் வீட்டின் முன்பாக முற்றுகையிட்டு மாநில தலைவர் பதவியை அகிலேஷ் யாதவிடமே ஒப்படைக்க கோரி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள்.
ஏற்கனவே அகிலேஷ் யாதவின் ஆதரவாளர்கள் 2 பேரை சிவ்பால் யாதவ் நீக்கியிருக்கிறார். இதனால் தற்போது அவருக்கும், அகிலேஷுக்கும் இடைேய மீண்டும் பனிப்போர் துவங்கியுள்ளது.