பொதி சுமக்கும் குழந்தைகள்
9/15/2016 2:37:55 PM
குழந்தைகளைப் பெற்றோர் பொத்திப் பொத்தி வளர்க்கிறார்கள் என்று குறைகூறுவதுண்டு. பள்ளிகளுக்குக் குழந்தைகள் தூக்கிச்செல்லும் புத்தகச்சுமையைப் பார்த்தவர்கள், இவ்வாறு கூற மாட்டார்கள்.சமீபத்தில் அசோசெம் அமைப்பு நடத்திய ஆய்வில், இந்தியாவில் 7 முதல் 13 வயதுக்குட்பட்ட 88 சதவீத மாணவ, மாணவிகள், பள்ளிக்குக் கொண்டுசெல்லும் புத்தகச்சுமை, அவர்களது உடல் எடையில் 45 சதவீதம் அளவுக்கு இருக்கிறது என்று தெரியவந்திருக்கிறது. 2012ம் ஆண்டில் இது 35 சதவீதமாக இருந்தது. மூன்று ஆண்டில், எவ்வளவு பெரிய வளர்ச்சி பாருங்கள்!
‘பள்ளி மாணவர் புத்தகச்சுமைச் சட்டம் 2006’ என்பது பெயரளவுக்கு இருக்கிறது. ஒரு குழந்தையின் எடையில், 10 சதவீதத்துக்கு மேல் புத்தகச்சுமை இருக்கக்கூடாது. இதை அமல்படுத்தவும், அரசை வலியுறுத்தவும் வேண்டியவர்கள் பெற்றோர்தான். புத்தகப்பை கனம் இல்லாமல் போனால், பெற்றோர் சோர்ந்தல்லவா விடுகிறார்கள்? மூளையில் சுமை ஏற்றலாமே ஒழிய, புத்தகப்பையில் அல்ல என்று அவர்கள் உணர்வதில்லையே!
ஐந்து வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்குப் புத்தகப்பையின் சுமை 2 கிலோவுக்குள்ளும், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 4.2 கிலோவுக்குள்ளும்தான் இருக்க வேண்டும். புத்தக மூட்டையைச் சுமப்பதே மாணவர்களுக்குப் பெரும் மன அழுத்தத்தைக் கொடுக்கிறது. குழந்தைகளுக்கு முதுகுவலி, கழுத்து வலி என சகலவிதத் திருகுவலிகளுக்கும் காரணமாக புத்தக மூட்டைகள் இருக்கின்றன. இதோடு கூன்முதுகு உள்பட நிரந்தரப் பிரச்னைகளும் உருவாகின்றன. அதுவும் பல பள்ளிகளில் மாடிப்படியேறிச் செல்ல வேண்டிய நிலைமை. மூச்சுத் திணறிவிடுகிறார்கள் குழந்தைகள்!
பள்ளிகளுக்கு அவசியமான புத்தகங்கள், நோட்டுகளைக் கொண்டுசென்றால், புத்தகச்சுமையைக் குறைக்க முடியும். ஆனால், தேவையற்ற புத்தகங்கள், நோட்டுகள், கைடுகள், பயிற்சிக் குறிப்பேடுகள் என எல்லாவற்றையும் சுமந்து செல்ல வேண்டிய கட்டாயம். ஆசிரியர்கள் தண்டனை வழங்கிவிடுவார்கள் என்ற பயத்தில் பெற்றோர்களும் தேவையற்ற பொருட்களைப் புத்தகப்பையில் திணிக்கின்றனர். சமச்சீர்க் கல்வி முறையால், ஒவ்வொரு பருவத்துக்கும் தனித்தனிப் புத்தகங்கள் வழங்கப்படுகின்றபோதிலும், இன்னும் கூட, புத்தகங்கள் மற்றும் நோட்டுகளின் அளவைக் குறைக்க முடியும்.‘டிஜிட்டல் இந்தியா’ என்று பெருமைப்படப் பேசுகிறோம். ஆனால், டிஜிட்டல் வகுப்பறைகள் என்பது இன்னும் ஏக்கமாகத் தான் இருக்கிறது. இவை வந்துவிட்டால், புத்தகப்பையே இல்லாத நிலை ஏற்படும். குறிப்பாக, இவை அரசுப்பள்ளிகளில் கொண்டுவரப்பட வேண்டும். மாணவர்கள் பொதி சுமப்பவர்களாக இனியும் இருக்க வேண்டாம்!