சிறை வன்முறைகள்
9/14/2016 2:43:12 PM
குற்றவாளிகளை அடைக்கத்தான் சிறைக்கூடங்கள்; சந்தேகம் இல்லை. அதேசமயம், அவர்கள் மனம் திருந்தும் செயலும் அங்குதான் நடைபெற வேண்டும். ஏனெனில் சிறையில் அடைக்கப்படுவோரைக் கைதிகள் என்று தற்போது அழைப்பதில்லை. சிறைவாசிகள் என்றுதான் குறிப்பிடுகின்றனர். அவர்கள், வாழ்வதற்கான உரிமை படைத்தவர்கள். மனிதநேயம் சிறையில் கிடைக்க வேண்டும். ஆனால், சிறைகளில் இதற்கான சாத்தியக்கூறு உண்டா என்றால், இல்லை என்று எளிதாகக் கூறிவிட முடியும்.
சிறைகளில் நடைபெறும் மோதல்களே இதற்குச் சாட்சியாய் விளங்குகின்றன. கைதிகளுக்கிடையே தகராறு, கலவரமாக மாறி, சிறைக்காவலர்கள் மற்றும் அதிகாரிகள் தாக்கப்படும் சம்பவங்கள், அடிக்கடி நடக்கின்றன. சிறையில் ஆயுதங்களுக்கு இடம் இல்லை. ஆனால், அங்கும் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்படுகின்றன. விபரீதச் சம்பவங்கள் நிகழும்போது, அதிகாரிகள் மூடி மறைத்துவிடுகின்றனர்.
வேலூர் மத்திய சிறையில் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் அடைக்கப்பட்டிருக்கின்றனர். உயர் பாதுகாப்புப்பிரிவில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்குச் சிறுநீரகத் தொற்று மற்றும் மூட்டு வலி உள்ளது. அதே பிரிவில், மதுரையைச் சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி ராஜேஷ் கண்ணாவும் அடைக்கப்பட்டுள்ளார்.
நேற்று காலை கைதிகள் அறை திறக்கப்பட்டதும் உடற்பயிற்சி செய்வதற்காக பேரறிவாளன் வெளியில் வந்துள்ளார். அங்கு மறைந்திருந்த ராஜேஷ்கண்ணா பேரறிவாளனை இரும்புக்கம்பியால் தலையில் தாக்கியுள்ளார். பேரறிவாளன் ராஜேஷைத் தடுக்க முயன்றும் தொடர்ந்து தாக்கியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சிறைவாசிகள் ராஜேஷ்கண்ணாவைத் தடுத்துள்ளனர். தற்போது சிகிச்சைக்குப் பிறகு பேரறிவாளன் நலமாக இருக்கிறார்.
சிறையின் உயர் பாதுகாப்புப் பகுதியில், இரண்டரை அடி நீள இரும்புக்கம்பி, ஆயுள் கைதிக்கு எப்படிக் கிடைத்திருக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது. சில நாட்களுக்கு முன்பே, இந்தக் கம்பியை அவர் மண்ணில் புதைத்து வைத்திருந்ததாகக் கூறப்பட்டாலும், அது நம்பும் படி இல்லை. பேரறிவாளன் மீது அவர் விரோதம் கொண்டிருந்தார் என்று சொல்வதற்கான காரணங்களும் சரியானதில்லை. சிறை விதிகளை மீறியதற்காக ராஜேஷ்கண்ணாவுக்கு வழங்கப்படும் சலுகைகள் ரத்து செய்யப்படுவதாக சிறைக் கண்காணிப்பாளர் அறிவித்திருக்கிறார்.
பல்வேறு சிறைகளிலும் கைதிகளுக்குக் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள், செல்போன்கள் உள்ளிட்டவை தாராளமாகக் கிடைக்கின்றன. பணப்புழக்கமும் இருக்கிறது. தேவையான ஆயுதங்களும் அளிக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருக்கிறது. சிறைகளில் அதிரடிச் சோதனைகள் நடந்தாலும், அவை பெயரளவுக்கு மட்டுமே நடக்கின்றன. முன்னரே தகவல் கசிந்துவிடுவதால், சோதனையில் எதுவும் சிக்குவதில்லை. சிறைவாசிகளிலும் அப்பாவியாக உள்ளவர்கள்தான் பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றனர். சிறைகளில் நடைபெறும் வன்முறைகள் அதிர்ச்சியளிக்கின்றன. சிறைக்கூடம் பள்ளிக்கூடமாக மாற வேண்டும் என்பது வெற்று முழக்கமாகத்தான் நீடிக்கிறது.