ரயில் கட்டணக் கொள்ளை
9/10/2025 12:51:08 PM
நாடு முழுவதும் 42 ராஜ்தானி, 46 சதாப்தி, 54 துரந்தோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களின் டிக்கெட் முன்பதிவு செய்வதில், புதிய கட்டண முறை அமலுக்கு வந்திருக்கிறது. அதன்படி, ரயில்களில் உள்ள படுக்கை அல்லது இருக்கைகளில் முதல் 10 சதவீதம் இப்போது இருக்கும் வழக்கமான கட்டணத்தில் முன்பதிவு செய்யப்படும். அதன்பிறகு ஒவ்வொரு 10 சதவீத இடங்களுக்கும் கட்டணத் தொகை கூடிக்கொண்டே இருக்கும். கட்டணத்தொகை 10 முதல் 50 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது.
கட்டண உயர்வு இல்லாத ரயில்வே பட்ஜெட்டை, மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தாக்கல் செய்திருந்தார். அது பயணிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. ஆனால், ஏழு மாதங்களில், ரயில்களில் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டிருப்பதால், பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஏற்கனவே ரயில் பயணக் கட்டண முறைகள் குழப்பமானவையாக இருக்கின்றன. சாதாரண ரயில், அதிவேக ரயில்களுக்கென தனித்தனியாகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சதாப்தி, ராஜ்தானி மற்றும் துரந்தோவில் இவற்றை விடக் கட்டணம் அதிகம். சுவைதா மற்றும் பண்டிகைக்காலச் சிறப்பு ரயில்களிலோ கொள்ளைக் கட்டணம். சாதாரண முன்பதிவுக்கு ஒரு கட்டணம், தட்கலுக்கு வேறு கட்டணம். தட்கலிலும் சீசன் காலங்களுக்கு என்றால் அதிகக் கட்டணம். இப்போது அறிமுகப்படுத்தியிருக்கிற ‘பிளக்சி’ கட்டண முறையும் இதேபோன்றதுதான். கிராக்கி ஏற்படும்போது, விலையை உயர்த்தும் புதுவகைத் தொழில்நுட்பம் தான் இது.
குறிப்பிட்ட ரயிலில் பயணம் செய்ய தாமதமாக முன்பதிவு செய்தால், கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். எந்தச் சதவீதத்தில் கட்டண உயர்வு என்பதைச் சாதாரணப் பயணிகளால் புரிந்துகொள்ள முடியாது. குழப்பமே மிஞ்சும். பயணிகளுக்கோ கடும் சுமை. எப்போது முன்பதிவு செய்தாலும், ஒரே கட்டணம் என்பதுதான் நியாயமானதாக இருக்கும்.
பண்டிகை மற்றும் சீசன் நேரங்களில் ஆம்னி பஸ்கள் அடிக்கும் கொள்ளைக்கும், இப்படி ரயில் பயணக் கட்டணம் வசூலிப்பதற்கும் வித்தியாசம் காண முடியாது. ஆனால், சேவை மற்றும் தரத்தில் ரயில்வே நிர்வாகம் எப்போது உயருமோ என்றால் கேள்விக்குறியே.
‘மொத்தம் 12,500 ரயில்கள் இயக்கப்படுகின்றன. அவற்றில் 142 ரயில்களில் மட்டுமே கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தினமும் ரயில்கள் மூலம் 2.30 கோடி பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். அவர்களில் 15 ஆயிரம் பேரை மட்டுமே இது பாதிக்கும். இம்முடிவை எடுக்கும்போதே சாதாரண மக்கள் பாதிக்கக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டோம்’ என்று ரயில்வே வாரியத் தலைவர் ஏ.கே.மிட்டல் கூறுகிறார். வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது என்பது இதுதானோ!