இஸ்ரோ அசத்துகிறது
9/9/2025 2:35:37 PM
இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தயாரித்த 2211 கிலோ எடையுள்ள இன்சாட்-3டிஆர் செயற்கைக்கோள், ஹரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி எப்05 ராக்கெட் மூலம் நேற்று விண்ணில் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது.
நவீன வானிலை ஆய்வு, பேரிடர் கண்காணிப்பில் இன்சாட் 3டிஆர் புதிய பரிணாமத்தை ஏற்படுத்தும். காற்று மண்டலம் சார்ந்த ஒலி அமைப்பைப் பயன்படுத்தி ஈரப்பதம், வெப்பநிலை, ஓசோன் நிலவரத்தைத் துல்லியமாக கணிக்கும். கல்பனா, இன்சாட் 3ஏ, இன்சாட் 3டி ஆகியவற்றுடன் சேர்ந்து மேம்படுத்தப்பட்ட தகவல்களைத் தரும். புயல், சுனாமி உள்பட பேரழிவுக் காலங்களில் இவற்றின் தாக்கம் மற்றும் திசை நகர்வைப் பற்றியும் எடுத்துக்கூறும். இதன் மூலம் நாட்டின் வானிலை முன்னறிவிப்பு மேம்படும். இந்தியா மட்டுமின்றி, வங்கதேசம், பூடான், மாலத்தீவு, நேபாளம், செசல்ஸ் தீவு, இலங்கை, தான்சானியா ஆகிய நாடுகளின் வானிலை மாற்றங்களையும் கண்காணிக்கும்.
செயற்கைக்கோளை விடவும், இஸ்ரோ பயன்படுத்திய ராக்கெட் தான் கவனத்துக்குரியது. ஜிஎஸ்எல்வி ராக்கெட்டில் கிரையோஜெனிக் இன்ஜின் தொழில்நுட்பத்தை ரஷ்யா தான் இந்தியாவுக்கு வழங்கிவந்தது. 2001 ஏப்ரல் முதல் 2010 டிசம்பர் வரை ரஷ்யா வழங்கிய இந்தத் தொழில்நுட்பத்துடன் 6 ஜிஎஸ்எல்வி ராக்கெட்களை இஸ்ரோ வெற்றிகரமாக ஏவியது. அமெரிக்காவின் மறைமுக எதிர்ப்பு காரணமாக கிரையோஜெனிக் இன்ஜின் தொழில்நுட்பத்தை வழங்க ரஷ்யா மறுத்தது. மறுக்கப்பட்ட தொழில்நுட்பத்தைத் தாங்களே கண்டறிய இஸ்ரோ விஞ்ஞானிகள் களமிறங்கினர். உள்நாட்டுத் தொழில்நுட்பத்துடன் கிரையோஜெனிக் இன்ஜினை உருவாக்கி அசத்தினர்.
உள்நாட்டு கிரையோஜெனிக் இன்ஜின் பொருத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி டி5 ராக்கெட் 2014 ஜனவரி 5ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. 2015 ஆகஸ்ட் 27ல் ஜிஎஸ்எல்வி டி6 ராக்கெட் ஏவப்பட்டது. தற்போது ஜிஎஸ்எல்வி எப் 05 ராக்கெட்டை ஏவியதன் மூலம், உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் தயாரான கிரையோஜெனிக் இன்ஜின் பொருத்தப்பட்ட ராக்கெட் ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளது.
அடுத்த சவாலாக 4 ஆயிரம் கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் அடுத்த ஆண்டு டிசம்பர் அல்லது ஜனவரியில் சுமந்து செல்லும். இனிவரும் காலங்களில் ஆண்டுக்கு 2 ஜிஎஸ்எல்வி ராக்கெட்களை விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டிருக்கிறது.
மறுபயன்பாட்டு விண்கலத்தில் மனிதர்களை விண்ணுக்கு அனுப்புவதற்கான ஆய்வும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு மத்திய அரசு அனுமதி அளித்தால், விண்ணுக்கு இந்தியர்கள் அனுப்பப்படுவர். மேம்படுத்திக்கொண்டே இருப்பதற்காகத் தான் ஆராய்ச்சியே. விண்வெளி ஆராய்ச்சியில், தொடர்ந்து அசாத்திய சாதனை படைத்து, உலகையே வியக்க வைக்கும், இஸ்ரோ விஞ்ஞானிகளை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.