தெரசாவுக்கு புனிதர் பட்டம்: வாடிகனில் நாளை விழா
9/3/2025 1:02:55 PM
வாடிகன், - ஏழை மக்கள் மற்றும் நோயாளிகளுக்கு சேவை ஆற்றுவதில் தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து கொண்டவர் அன்ைன தெரசா. உலக அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர். அவர் மரணமடைந்து 19 ஆண்டுகளுக்கு பின், இப்போது அவருக்கு ‘புனிதர்’ பட்டம் வழங்கப்படுகிறது. அவரது அர்ப்பணிப்புகளை அங்கீகரிக்கும் விதமாக இப்பட்டம் வழங்கப்படுகிறது. தெரசா துவங்கிய அமைப்புகளின் செயல்பாடு மற்றும் அவரது கருத்துகளில் உடன்பாடு இல்லாத சில கத்தோலிக்க அமைப்புகள் இதற்கு எதிர்ப்பும் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், இத்தாலியில் ரோம் நகரில் உள்ள வாடிகன் புனித பீட்டர் சதுக்கத்தில் நாளை நடைபெறும் விழாவில் போப் ஆண்டவர் பிரான்சிஸ், அன்னை தெரசாவை புனிதர் பட்டம் பெற்றவராக அறிவிக்கிறார். அப்போது 2 மணி நேர பிரார்த்தனை நடைபெறுகிறது. இந்த விழாவில் உலகம் முழுவதிலும் இருந்து தலைவர்கள், பேராயர்கள், பக்தர்கள் என லட்சக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர். இந்திய அரசு சார்பில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் 12 பேர் கொண்ட பிரதிநிதிகள் குழு கலந்து கொள்கிறது. இந்த குழுவினர் நேற்று டெல்லியில் இருந்து ரோமுக்கு புறப்பட்டுச் சென்றனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆகியோரும் விழாவில் கலந்து கொள்கிறார்கள்.
கடந்த 1910ம் ஆண்டு அல்பேனிய பெற்றோருக்கு பிறந்த அன்னை தெரசா, 1929ம் ஆண்டு இந்தியாவின் டார்ஜிலிங் நகருக்கு ஆசிரியையாக பணிபுரிய வந்தார். பல ஆண்டுகள் அங்கு பணியாற்றிய அவர், 1950ல் ‘‘மிஷனரிஸ் ஆப் சாரிட்டிஸ்’’ என்னும் சேவை அமைப்பை கொல்கத்தாவில் தொடங்கினார். இந்த அமைப்புக்கு இன்று 133 நாடுகளில் கிளைகள் உள்ளன. 5 ஆயிரம் பேர் இதில் பணிபுரிகின்றனர். 1997ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதியன்று இறுதி மூச்சு நிற்கும் வரை அன்னை தெரசா, தன்னை சேவையில் ஈடுபடுத்திக் கொண்டார். அவருடைய நினைவு தினத்தையொட்டி அவருக்கு புனிதர் பட்டம் அளிக்கும் விழா வாடிகன் நகரில் நடக்கிறது.
விழாவில் பங்கேற்க சென்றுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, வரும் 5ம் தேதி வரை வாடிகன் நகரில் தங்கியிருப்பார். பின்னர், அங்கிருந்து ஜெர்மனி சென்று தொழிலதிபர்களை சந்தித்து மேற்கு வங்கத்திற்கு முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுக்கிறார். வரும் 10ம் தேதி அவர் கொல்கத்தா திரும்புகிறார்.