குழந்தை கழுத்தில் கத்தி வைத்து தம்பதியிடம் 10 பவுன் நகை பறிப்பு
9/3/2025 1:02:29 PM
கரூர், -கரூர் வளையல்காரன்தெருவை சேர்ந்தவர் தங்கவேல்(40). அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ உதவியாளர். இவரது மனைவி காந்தி. இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. நேற்று நள்ளிரவு 12 மணியளவில் 30 வயது மதிக்கதக்க 2 பேர் பைக்கில் இவர்களது வீட்டுக்கு நுழைந்தனர். ஒருவன் ஹெல்மெட் போட்டிருந்தான். மற்றவன் முகத்தை துணியால் மறைத்திருந்தான். ஒருவன் மனைவி அருகில் அமர்ந்திருந்த தங்கவேலை ஓங்கி முதுகில் அடித்தான். இதில் தங்கவேல் அதிர்ச்சியடைந்தார். மற்றொருவன் தங்கவேல் மனைவி காந்தியிடம் இருந்த 3 வயது குழந்தையை பறித்து கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி வீட்டில் உள்ள பணம், நகைகளை இருவரையும் எடுத்து வர சொன்னான். உடனே அதிர்ச்சியடைந்த காந்தி, வீட்டில் பணம், நகை இல்லை எனக்கூறி தனது கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் செயினை கழற்றி கொடுத்தாள். மர்ம ஆசாமிகள் இருவரும் வீட்டை விட்டு வெளியே வந்து பைக்கில் தப்பி ஓடினர். அதன் பிறகு தங்கவேலுவும் அவரது மனைவியும் சத்தம் போடவே அப்பகுதியை சேர்ந்தவர்கள் அவர்களை பிடிக்க ஓடினர். அதற்குள் அந்த மர்ம ஆசாமிகள் பைக்கில் தப்பிவிட்டனர். கரூர் டவுன் போலீசார் வழக்கு பதிந்து நகையை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
தாலி பறிப்பு
தஞ்சை மாவட்டம், திருவையாறு அடுத்த அம்மன்பேட்டையை சேர்ந்த வீரமணி மனைவி பாப்பாத்தி(66). இவர் இன்று அதிகாலை 2 மணி அளவில் வீட்டின் பின்புற கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு பாப்பாத்தி எழுந்து பின்பக்கம் போனார். அப்போது அங்கு ஒளிந்திருந்த ஒரு மர்ம நபர் பாப்பாத்தியின் தாலியை பறித்துக்கொண்டு தப்பிவிட்டார். புகாரின் பேரில் நடுக்காவேரி போலீசார் விசாரிக்கின்றனர்.
இன்னொரு சம்பவம்
பூதலூர் அடுத்த சித்தாயல் குடியானத்தெருவைச் சேர்ந்தவர் கருணாநிதி. இவர் தன் குடும்பத்தாருடன் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருந்தார். இரவு காற்று வரவில்லை என்று கருணாநிதியின் அத்தை புஷ்பராஜாமணி வீட்டின் கதவை திறந்து வைத்துள்ளார். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடுபுகுந்து வீட்டின் உள்ளே தூங்கிக் கொண்டிருந்த கருணாநிதியின் மனைவி அகிலா(40) கழுத்தில் அணிந்திருந்த ஐந்தரைப் பவுன் தாலிச் செயினை பறித்து சென்று விட்டனர். பூதலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.