உத்திரமேரூர் அருகே 15நாளாக இருளில் தவிக்கும் புலியூர் கிராமம்
9/3/2025 12:44:07 PM
உத்திரமேரூர், -காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே புலியூர் கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த கிராமத்தை சுற்றிலும் உள்ள நிலங்களில் விவசாயம் நடக்கிறது. இந்த கிராம மக்களுக்கு குடிநீராதாரமாக மேல்நிலை நீர்தேக்க தொட்டி உள்ளது. மேட்டார் மூலம் நீரேற்றி, பொது மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு உத்திரமேரூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இடி, மின்னல் காற்றுடன் பலத்த மழை பெய்தது. புலியூர் கிராமத்திற்கு செல்லும் மின்கம்பத்தின் மீது மரங்கள் சாய்ந்ததால் ஒயர்கள் துண்டானது. இதனால் மின்சாரம் இன்றி மக்கள் இருளில் தவித்து வருகின்றனர். மின்மோட்டாரும் இயக்க முடியாததால் குடிநீர் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. சுகாதாரமற்ற குடிநீரை பொது மக்கள் பயன்படுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
தற்போது ஆங்காங்கே டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. சுகாதாரமற்ற குடிநீரை பருகுவதால் தங்களது கிராமத்திலும் மர்ம காய்ச்சல் பரவிவிடும் என்ற அச்சம் பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களது பயிர்களை முறையாக பராமரிக்க முடியாமல் கவலையடைந்துள்ளனர். ‘’மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்ககை எடுக்கப்படவில்லை’’ என பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புலியூர் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.