மரபணு மாற்ற கடுகு உற்பத்திக்கு மத்திய அரசு அனுமதியளிப்பதா? - எஸ்.டி.பி.ஐ. கட்சி கடும் கண்டனம்
9/3/2025 12:41:33 PM
சென்னை, -எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் தெகலான் பாகவி இன்று வெளியிட்ட அறிக்ைக:
டெல்லி பல்கலைக்கழகத்தில் உள்ள மரபணு பொறியியல் பிரிவை சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கியிருக்கும் தாரா மஸ்டர்ட் ஹைபிரிட் 11’ என்ற மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு விதைக்கு தொழில்நுட்ப ரீதியிலான அனுமதியை மத்திய சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும், மரபணு மாற்ற அனுமதி அளிக்கும் குழு அளித்துள்ளது. இது கவலையளிக்கும் விசயமாகும். இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.
மரபணு மாற்றம் செய்யப்படாத உயர்ரக கடுகு விதைகள் ஏற்கனவே சந்தையில் போதிய அளவு கிடைக்கின்றன. இதனால் இந்தியாவில் அதனைக் கொண்டு வருவதற்கான அவசியம் தற்போது இல்லாத சூழலில் அதற்கு ஏன் அனுமதி அளிக்க வேண்டும். ஏற்கனவே, உற்பத்தி அதிகரிப்பிற்காக, மரபணு மாற்றப்பட்ட மான்சாண்டோ பருத்தி ரகம் இந்தியாவில் அனுமதிக்கப்பட்டு பெரும் இழப்பை சந்தித்த விவசாயிகளில் ஆயிரக்கணக்கானோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்நிலையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகை அனுமதித்தால், பருத்தி விவசாயிகளுக்கு ஏற்பட்ட நிலைமையே மீண்டும் ஏற்படும்.
இந்தியாவில் உணவு வகைகளில் கத்தரிக்காய், கடுகு ஆகியன அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆயுர்வேத மருத்துவத்துக்கும் இவை பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய சூழலில் இயற்கையாக கிடைக்கும் பொருளை, மரபணு மாற்ற முறையில் உற்பத்தி செய்யும்போது, நச்சுத்தன்மை வாய்ந்ததாக மாறும். எனவே, மரபணு மாற்ற கடுகு வகையை தடை செய்ய வேண்டும். அதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.