மலேசியாவில் பயங்கரம் - தஞ்சை வாலிபர் உயிரோடு எரிப்பு?
9/3/2025 12:39:32 PM
திருச்சி, -தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் சுப்ரமணியர் கோயில் தெருவை சேர்ந்தவர் கண்ணன்(32). இவரது மனைவி பெரியாச்சி(30), மகன் முனீஸ்வரன்(6), மகள் முனீஸ்வரி(5). அதிராம்பட்டினத்தில் வருமானம் இல்லாததால் தொழில் தேடி கடந்த 2014ல் மலேசியா சென்றார். அங்கு கேஸ் சப்ளை செய்யும் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். கடந்த ஜூலை 19ம் தேதி கேஸ் ஏஜென்சி நிறுவனத்திற்கு வேலை முடிந்து சென்றுள்ளார். அப்போது ஏஜென்சி உரிமையாளருக்கும், கண்ணனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. சில நிமிடங்களில் கண்ணன் தனது உடலில் தீப்பற்றி எரிந்தவாறு கூச்சலிட்டவாறு ஓடியுள்ளார். இதை கண்ட அப்பகுதி மக்கள் கோணியை கொண்டு தீயை அணைத்துள்ளனர்.
தகவலறிந்து அங்கு வந்த போலீசார், கண்ணனை அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவருடன் இருந்த நண்பர்கள் மூலம் தகவலறிந்த கண்ணனின் மனைவி மற்றும் பெற்றோர் கடந்த ஜூலை 27ம் தேதி தஞ்சாவூர் கலெக்டர் மற்றும் தன்னார்வ அமைப்பிடம் தீக்காயத்துடன் உயிருக்கு பேராடும் கணவனை மீட்டு தருமாறு மனு கொடுத்தனர்.
மனுவின் பேரில் மலேசியாவில் உள்ள இந்திய தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு நேற்று காலை மலேசியாவில் இருந்து மலிண்டோ விமானம் மூலம் கண்ணன் தீக்காயத்துடன் திருச்சி விமானநிலையம் அழைத்து வரப்பட்டார். பின்னர் அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு உடல் பயணம் செய்ய ஏதுவாக உள்ளதா என பரிசோதித்தபின் ஆம்புலன்ஸ் மூலம் மனைவி பெரியாச்சி சொந்த ஊரான தூத்துக்குடி லெவஞ்சிபுரத்திற்கு அழைத்து சென்றனர். ஆனால் அவரது உறவினர்கள், மலேசியாவில் ஏற்பட்ட தகராறில் முதலாளியே பெட்ரோல் ஊற்றி எரித்ததாக குற்றம்சாட்டினர்.
கண்ணன் கூறுகையில், கேஸ் ஏஜென்சி நிறுவனத்தில் வேலை பார்த்த போது எனக்கும், முதலாளிக்கும் தகராறு ஏற்பட்டு என்னை கொடுமைப்படுத்தினர். திடீரென சில நிமிடத்தில் என் மீது தீப்பற்றி எரிந்து உயிருக்கு போராடினேன் என்றார்.