குடியிருப்புகளின் கழிவுநீர் கலப்பு கூவமாக மாறுகிறது காவிரி ஆறு
9/3/2025 12:39:03 PM
திருச்சி,-வெளி மாநிலங்களிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், காவிரியாற்றில் புனித நீராட தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்சி வந்து செல்கின்றனர். அம்மாமண்டபம் படித்துறையில் முதியோர்களுக்கு திதி கொடுக்கவும் ஏராளமான பொதுமக்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். ரங்கம் ரங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வெளியூர்களில் இருந்து வருகை தரும் பக்தர்கள், காவிரியில் புனித நீராடினால் பாவங்கள் அகலும் என்ற ஐதீகத்தால் காவிரியில் குளித்துவிட்டு பெருமாளை தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். திருச்சியை சுற்றியுள்ள கிராம கோயில்களின் விழாக்களுக்கு புனிதநீர் காவிரியாற்றின் அம்மாமண்டபம் படித்துறையிலிருந்துதான் எடுத்துச் செல்கின்றனர்.
அம்மாமண்டபம் படித்துறையிலுள்ள புனிதமான காவிரியாற்றில் தற்போது, திருச்சி சிந்தாமணி பகுதியில் இருந்தும், ரங்கம் பகுதியிலிருந்தும் சாக்கடை கழிவுநீர் கலந்து திருச்சியின் கூவமாக காவிரி ஆறு மாறி வருகிறது. அம்மாமண்டபம் படித்துறை அருகே ஆற்றில் ஆங்காங்கே தேங்கியுள்ள தண்ணீரில் சாக்கடை கழிவுநீர் கலந்து வருகிறது. அம்மாமண்டபம் சாலையில் காவிரியாற்றின் படுகைகளில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நேரடியாக காவிரியாற்றில் கலந்து காவிரியாறு மாசடைந்து வருகிறது. இதனால் அப்பகுதியே துர்நாற்றம் வீசியது.
இதனால் திதி கொடுக்க வரும் பக்தர்களும், ரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களும் முகம் சுழித்தபடி செல்கின்றனர். இதனால் தொற்று நோய் ஏற்படவும் வாய்ப்புள்ளது. அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்போர் முறையான சாக்கடை வசதி ஏற்படுத்தாமல், காவிரியில் கழிவுநீர் விடுவதை அதிகாரிகள் கண்காணித்து மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் நிரந்தர தீர்வு காண வேண்டும். புனிதமான காவிரியாற்றில் மாசு ஏற்படும் முன்னரே தடுக்கும் முயற்சியில் அரசு ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.