ஆபாச படத்தை நெட்டில் வெளியிடுவேன் - மனைவியை மிரட்டிய பள்ளி ஆசிரியர் கைது
9/3/2025 12:37:59 PM
திருப்பூர், -தன்னுடன் ஒன்றாக இருக்கும் ஆபாச புகைப்படத்தை வெளியிடுவேன் என்று மிரட்டுவதாக மனைவி அளித்த புகாரின் பேரில் பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர் பாப்பநாயக்கன்பாளையம் கொடிக்கம்பம் பகுதியை சேர்ந்தவர் நாகஜோதி (45). இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியராக உள்ளார். மதுரை கல்லுப்பட்டியை சேர்ந்தவர் காளீஸ்வரன் (48). இவர் திருப்பூர் சூசையாபுரத்தில் தங்கியிருந்து ராயபுரம் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் இருவரும் திருமணம் செய்து கொண்டு திருப்பூரில் வசித்து வந்தனர். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக, தற்போது இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.
இதுதொடர்பாக வழக்கில் கோர்ட்டில் ஆஜராக சென்றபோது காளீஸ்வரன் தன்னை மிரட்டியதாக நாகஜோதி திருப்பூர் வடக்கு போலீசில் புகார் செய்தார். அதில், திருப்பூர் லட்சுமி நகரில் உள்ள மாவட்ட கோர்ட்டுக்கு சென்றபோது, அங்கு வந்த காளீஸ்வரன் என்னிடம் வழக்கை வாபஸ் வாங்க வேண்டும் என்றும், இல்லையென்றால் இருவரும் ஒன்றாக சேர்ந்து இருந்ததை செல்போனில் படம் எடுத்து வைத்திருப்பதாகவும் அந்த படத்தை இணையதளத்தில் வெளியிடுவேன் என்றும் மிரட்டினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் காளீஸ்வரனை கைது செய்தனர்.