உச்சநீதிமன்றம் உத்தரவிட்டால் செப்டம்பர் 3வது வாரம் மேட்டூர் அணை திறப்பு?
9/3/2025 12:37:28 PM
திருச்சி, - தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டால் மேட்டூர் அணை செப்டம்பர் 3வது வாரம் திறக்கப்படலாம்.காவிரியில் கர்நாடக அரசு தர வேண்டிய 50 டிஎம்சி தண்ணீரை திறந்து விடும்படி கேட்டு தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது. இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, லலித் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வக்கீல்களும் வாதிட்டனர்.இந்த வாதத்தை கேட்ட நீதிபதிகள், வாழு வாழவிடு என நடந்து கொள்ளும்படியும், மனிதாபிமானத்தோடு தண்ணீர் விடும்படியும் கூறி வழக்கை வரும்5ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். எனவே வரும் 5ம் தேதி விசாரணை மீண்டும் தொடங்குகிறது. இந்த விசாரணையின் முடிவில் தமிழகத்திற்கு ஓரளவு தண்ணீர் திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிடலாம் என தஞ்சை விவசாயிகள் கருதுகிறார்கள்.
50 டிஎம்சி தமிழக அரசு கேட்டுள்ள நிலையில், கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே உள்ள அணைகளிலும், கபினியிலும் சேர்த்து 100 டிஎம்சி அளவுக்கு தண்ணீர் உள்ளது. எனவே குறைந்தபட்சம் 25 டிஎம்சி தண்ணீர் கொடுக்கும்படி உத்தரவிட்டாலும் மேட்டூர் அணை திறப்பதற்கு போதுமான தண்ணீர் வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேட்டூர் அணையில் இருந்து சம்பா பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டுமானால் குறைந்த படசம் 90 அடி தண்ணீர் தேவை. தற்போது 37 டிஎம்சி உள்ள நிலையில் இன்னும் 15 டிஎம்சி தண்ணீர் கிடைத்தாலே நீர்மட்டம் 90 அடியை எட்டிவிடும். 90 அடி தண்ணீர் மூலம் சம்பா சாகுபடிக்கு 30 நாட்களுக்கு திறக்கலாம். அதற்குள் வடகிழக்கு பருவமழை வந்து விடும்.
எனவே மேட்டூர் அணை செப்டம்பர் 3வது வாரத்தில் திறக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து விட்டது. இன்று காலை 8 மணிக்கு மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 8,033 கனஅடி தண்ணீர் வந்தது.நேற்று காலை வினாடிக்கு 10,694 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நேற்று காலையை விட இன்று வினாடிக்கு 2,661 கனஅடி தண்ணீர் வரத்து குறைந்து விட்டது.அணையின் நீர்மட்டம் இன்று காலை 74.870 அடி. அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 1,250 கனஅடி திறக்கப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 37.034 டிஎம்சி.