இந்திய வங்கதேச எல்லையில் அசாம் முதல்வர் ஆய்வு
9/3/2025 12:25:10 PM
கவுகாத்தி, -இந்தியா- வங்கதேச எல்லையில் அசாம் முதல்வர் சோனோவால் ஆய்வு செய்தார்.வங்கதேசத்தில் இருந்து நமது எல்லை மாநிலமான அசாமிற்குள் அடிக்கடி மக்கள் ஊடுருவுகின்றனர். இந்த ஊடுருவல்களை தடுப்பதற்காக முதல்வர் சோனோவால் தலைமையிலான அரசு தீவிர நடவடிக்கை மேற்கெண்டு வருகிறது. ஏற்கனவே கடந்த சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது வங்கதேச ஊடுருவல் முற்றிலுமாக தடுக்கப்படும் என பாஜ தரப்பில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இந்த சூழலில் அசாமில் பாஜ வெற்றி முதல்வராக சோனோவால் பொறுப்பேற்றார். இதை தொடர்ந்து இந்திய வங்கதேச எல்லையில் உள்ள தெற்கு சல்மாராவில் மன்கசார் செக்டாரில் முதல்வர் சோனோவால் ஆய்வு மேற்கொண்டார்.
மன்கசார் செக்டாரில் சுமார் 30 கிமீ தொலைவுக்கு எல்லையில் அமைக்கப்பட்டு வரும் இரும்பு கம்பி தடுப்பு வேலியை முதல்வர் நேரில் பார்வையிட்டார். அதே போல் அதிகளவு ஊடுருவல் பாதிப்பு உள்ள சிசுமாரா எல்லை பகுதியிலும் சோனோவால் பார்வையிட்டு அங்கு பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார். இந்திய வங்க தேச எல்லையில் ஊடுருவலை தடுக்கும் வகையில் நாள் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள எல்லை படை வீரர்களை சந்தித்து நிலவரம் குறித்து கேட்டறிந்தார். வேலித்தடுப்பை மேலும் பலப்படுத்துவதற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்றும் அவர் வீரர்களிடம் உறுதி அளித்தார்.