ஆம்புலன்சில் இருந்து இறக்கி விட்டதால் மகளின் சடலத்தை சுமந்து 6 கிமீ நடந்து சென்ற தந்தை - ஒடிசாவில் பரிதாபம்
9/3/2025 12:24:40 PM
மல்கன்கிரி, -ஒடிசா மாநிலம், மல்கன்கிரி மாவட்டத்தை சேர்ந்தவர் கெமுடு. இவரது 7 வயது மகள் பர்ஷாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. மிதலி பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பர்ஷாவின் உடல்நிலை மிகவும் மோசமானது. இதையடுத்து, மேல்சிகிச்சைக்காக மல்கன்கிரி அரசு மருத்துவமனைக்கு டாக்டர்கள் அனுப்பி வைத்தனர். ஆம்புலன்சில் மகளை அழைத்து கொண்டு கெமுடு, அவரது மனைவி ஆகியோர் சென்றனர். ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்த போது திடீரென சிறுமி பர்ஷா உயிரிழந்தாள். இதையறிந்த ஆம்புலன்ஸ் டிரைவர், சடலத்தை கீழே இறக்குமாறு கூறியுள்ளார்.
சிறுமியின் பெற்றோர் கெஞ்சி கேட்டுக் கொண்டும் ஆம்புலன்ஸ் டிரைவர் மனமிரங்கவில்லை. இதையடுத்து மகளின் சடலத்துடன் நடுவழியில் கீழே இறங்கினர். தனது சொந்த ஊருக்கு திரும்ப நினைத்த சிறுமியின் தந்தை கெமுடு, மகளின் சடலத்தை தூக்கி கொண்டு நடந்து ெசன்றார். சுமார் 6 கிமீ தூரத்துக்கு சடலத்துடன் அவர் நடந்தார். இதை கண்ட சிலர் கெமுடுவிடம் விசாரித்தபோது நடந்த சம்பவத்தை கூறினார். இதுகுறித்து அப்பகுதி வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்பு கொண்டு தெரிவித்தனர். இதையடுத்து, வாகனத்துடன் விரைந்து வந்த மருத்துவ குழுவினர், சிறுமியின் சடலத்தை எடுத்து சென்றனர்.
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதுகுறித்த விசாரணைக்கு மல்கன்கிரி மாவட்ட கலெக்டர் சுதர்சன் சக்கரவர்த்தி உத்தரவிட்டார். மாவட்ட மருத்துவ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதையடுத்து, ஆம்புலன்ஸ் டிரைவர், மருத்துவ உதவியாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒடிசாவில் கடந்த மாதம் 24ம் தேதியன்று உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்த மனைவியை, கணவர் 10 கிமீ தோளில் தூக்கி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், தற்போது சிறுமியின் சடலத்தை அவளது தந்தை தூக்கி சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.