தானிய விதைப்பு 33% அதிகரிப்பு பருப்பு விலை குறைய வாய்ப்பு - மத்திய அரசு தகவல்
9/3/2025 12:24:07 PM
புதுடெல்லி, -இந்த ஆண்டு தானியங்கள் உற்பத்தி பாசன பரப்பு 33 சதவீதம் அதிகரித்துள்ளதால், பருப்பு உற்பத்தி அதிகரித்து விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.கடந்த ஆண்டு பருப்பு உள்ளிட்ட தானியங்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. பருப்பு வகைகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டதால் கடுமையான விலை உயர்வு ஏற்பட்டது. இதை சமாளிக்க பாகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து பருப்பு உள்ளிட்ட தானியங்களை மத்திய அரசு அதிகமாக இறக்குமதி செய்யும் நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக பருப்பு விலை கிலோ ரூ.120க்குள் கட்டுப்படுத்தப்பட்டது. இருந்த போதிலும் இந்தியாவில் பருப்பு உள்பட தானியங்கள் தேவை அதிகமாக உள்ளதால், நடப்பு ஆண்டில் பருப்பு உற்பத்தியை அதிகரித்து தன்னிறவை நோக்கி செல்ல இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதையொட்டி நடப்பு பருவத்தில் பருப்பு உள்ளிட்ட தானியங்களின் விதைப்பு 33 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கடந்த ஆண்டில் 106.92 லட்சம் ஹெக்டேரில் தானியங்கள் விதைப்பு நடைபெற்றது. நடப்பு ஆண்டில் இது 33 சதவீதம் அதிகரித்து 142.02 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு துவரம் பருப்பு விலைதான் வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. தற்போது விதைப்பு அதிகரித்துள்ளதன் மூலமும், அறுவடைக்கு பிறகு குறைந்தபட்ச கொள்முதல் விலையை அதிகரித்து பெறுவதன் மூலமும் வருகிற மாதங்களில் பருப்பு விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது’’ என கூறப்பட்டிருக்கிறது.
2016-17ம் ஆண்டில் 20 மில்லியன் டன் அளவுக்கு பருப்பு உற்பத்தி இருக்கும் என மத்திய அரசு எதிர்பார்க்கிறது. இதன் மூலம் தற்போது வெளிநாட்டில் இருந்து இறக்குமதி தேவையை எதிர்நோக்கி இருக்கும் நிலை மாறி தன்னிறைவை எட்ட வாய்ப்புள்ளதாக நம்பப்படுகிறது. அதே போல் பருப்பு உள்ளிட்ட தானியங்கள் மட்டுமின்றி அரிசி, எண்ணெய் வித்துகள் ஆகியவற்றின் உற்பத்தியும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பருத்தி, கரும்பு, சணல் உள்ளிட்டவற்றின் உற்பத்தியும் கடந்த 2015ம் ஆண்டோடு ஒப்பிடும் போது சரிந்தே காணப்பட்டது. ஒட்டுமொத்தமாக நடப்பு ஆண்டில் அனைத்து வகையான பயிர்களின் விதைப்பு 1033.99 லட்சம் ஹெக்டேர் பயிரிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 997.11 லட்சம் பயிரிடப்பட்டதன் மூலம் நடப்பு ஆண்டில் 3.7 சதவீதம் அதிகம் உயர்ந்துள்ளது.