நிதி ஒதுக்கியதில் காலதாமதம் - மாணவர்கள் படிப்பு முடிந்த பின்பு இலவச லேப்டாப் விநியோகம் ; தமிழக அரசுக்கு சி.ஏ.ஜி கண்டனம்
9/3/2025 12:21:49 PM
சென்னை, - தமிழக அரசின் இலவச லேப்டாப் திட்டத்திற்கு நிதி ஒதுக்கியதில் காலதாமதம் செய்ததால், மாணவர்களுக்கு கல்வியாண்டு முடிந்த பின்பு, லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது. இது அத்திட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்றவில்லை என்று மத்திய தணிக்கை துறை அதிகாரி(சிஏஜி) அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.தமிழக அரசு கடந்த 2011-12ம் நிதியாண்டு முதல் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும். மாணவர்கள் படிக்கும் போதே தொழில்நுட்ப ரீதியாக தங்கள் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துக்காக இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக அரசு அறிவித்தது.
கடந்த 5 ஆண்டுகளில் ஆண்டுக்கு 5.40 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப் ரூ.4,722 கோடியில் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. நடப்பாண்டில் இலவச லேப்டாப் திட்டத்துக்கு அரசு ரூ.1080 கோடி நிதி ஒதுக்கி உள்ளது.
எல்காட் நிறுவனத்தின் மூலம் லேப்டாப் கொள்முதல் செய்யப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. அதற்கான நிதியை எல்காட் நிறுவனத்துக்கு தமிழக அரசு வழங்கும். இந்த நிலையில் தமிழக அரசு தாமதமாக நிதி ஒதுக்கியதால் எல்காட் நிறுவனம் மாணவர்களுக்கு தாமதமாக லேப்டாப்களை கொள்முதல் செய்து கொடுத்துள்ளதாக மத்திய தணிக்கை துறை கண்டனம் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து தணிக்கைத்துறை ஆய்வில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசு இலவச லேப்டாப் திட்டத்துக்காக எல்காட் நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய நிதியை தாமதமாக வழங்கியதால் உரிய காலத்தில் லேப்டாப் கொள்முதல் செய்யப்படவில்லை. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கல்வியாண்டு முடிந்த பின்பு லேப்டாப் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திட்டத்தின் நோக்கமே பாழடிக்கப்பட்டுள்ளது. அரசு தாமதமாக நிதி ஒதுக்கியதே இதற்கு முக்கிய காரணம்.
724 லேப்டாப் மாயம்
தணிக்கை அறிக்கையில், ‘‘கடந்த 2015ம் ஆண்டு மார்ச் வரை, தமிழகம் முழுவதும் 724 இலவச லேப்டாப்கள் திருடு போயுள்ளது. அதில் வெறும் 128 லேப்டாப் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 38 லேப்டாப் காணாமல் போனதற்கு அதிகாரிகளிடம் ரூ.5.70 லட்சம் பணம் வசூலிக்கப்பட்டுள்ளது.மீதமுள்ள 558 லேப்டாப்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்கான பணமும் யாரிடமும் வசூலிக்கப்படவில்லை. இதுகுறித்து காவல்நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழக அரசு பள்ளி, கல்லூரிகள் பாதுகாப்பானதாக இல்லை என்பதும் தெரியவந்துள்ளது’’ என்று கூறப்பட்டிருக்கிறது