கோயம்பேடு மார்க்கெட்டில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி
9/2/2025 4:59:31 PM
அண்ணாநகர், -சென்னை கோயம்பேடு, சேமாத்தம்மன் நகர் 2-வது செக்டாரை சேர்ந்தவர் பாஸ்கர் (45). இவரது மனைவி லதா. குழந்தைகள் இல்லை. பாஸ்கர், காலை நேரத்தில் கோயம்பேடு மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளியாகவும் பிற்பகலில் ஒரு ஓட்டலில் சூபர்வைசராகவும் பணிபுரிந்தார்.இந்நிலையில், இன்று காலை பாஸ்கர் மூட்டை தூக்கும்போது, கோயம்பேடு மார்க்கெட் சாலையில் மழைநீர் தேங்கியிருந்த பகுதியில் உள்ள ஒரு மின்கம்பத்தை தொட்டார். அப்போது பாஸ்கர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் தூக்கி வீசப்பட்ட பாஸ்கருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.அக்கம்பக்கத்தினர் பாஸ்கரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். கோயம்பேடு மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.