புழல் சிறையில் இடவசதியின்றி தவிக்கும் சிறுவர்கள் - அதிகாரிகள் அலைக்கழிப்பு
9/2/2025 4:58:39 PM
புழல், -புழல் மத்திய சிறைச்சாலை வளாகத்தில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இளஞ்சிறார் பள்ளி துவங்கப்பட்டது. இதில் 18 முதல் 21 வயது வரையுள்ள குற்றவாளிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.இங்கு 100 பேர் மட்டுமே தங்குவதற்கு வசதி உள்ளது. ஆனால், தற்போது இந்த வளாகத்தில் சுமார் 180-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் அடைக்கப்பட்டு உள்ளனர். இதனால் அவர்கள் அங்குள்ள கழிவறையை பயன்படுத்துவதற்கும் குளிப்பதற்கும் சிரமப்பட்டு வருகின்றனர். படுப்பதற்கும் இடவசதி இல்லை. மேலும் சொறி, சிரங்கு உள்ளிட்ட பல்வேறு தொற்றுநோய்கள் ஏற்பட்டு வருகின்றன.
இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகளிடம் இளஞ்சிறார் பள்ளி நிர்வாகிகள் பலமுறை புகார் தெரிவித்தும், அவர்கள் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், ‘இடவசதி இல்லை’ என அலைக்கழித்து வருகின்றனர்.மேலும், சிறார் பள்ளி வளாகம் அருகே அதிகளவில் குப்பைகள் தேங்கியுள்ளதால், சிறுமழை பெய்தாலே கடும் துர்நாற்றம் வீசுகிறது. அத்துடன் அங்கு அதிகளவில் கொசுக்கள் உற்பத்தியாகி, இங்குள்ள சிறுவர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.இங்குள்ள குப்பைகளை உடனுக்குடன் அகற்றி சுத்தம் செய்வதற்கு இங்குள்ள சிறைத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிறுவர்களும் அவர்களது உறவினர்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.