செரீனா வில்லியம்ஸ் சாதனை வெற்றி
9/2/2025 4:51:20 PM
நியூயார்க்: கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான யு.எஸ்.ஓபன் டென்னிஸ் தொடர், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில், மகளிர் ஒற்றையர் 2ம் சுற்றில், உலகின் முதல் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ெசரீனா வில்லியம்ஸ், சக நாட்டவரான வானியா கிங்கை எதிர்கொண்டார். இதில், 6-3, 6-3 என்ற செட் கணக்கில் செரீனா வில்லியம்ஸ் எளிதாக வெற்றி பெற்று, 3ம் சுற்றுக்கு முன்னேறினார். இந்த போட்டியில் செரீனா வில்லியம்ஸ் 13 ஏஸ் சர்வீஸ்களை வீசினார். யு.எஸ்.ஓபனில் 7வது முறையாகவும், ஒட்டுமொத்தமாக கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் 23வது முறையாகவும் பட்டம் வெல்ல முயன்று கொண்டிருக்கும் செரீனா வில்லியம்ஸ் பெற்ற 306வது கிராண்ட்ஸ்லாம் வெற்றி இது. இதன் மூலம் 306 வெற்றிகள் பெற்றுள்ள மார்டினா நவரத்திலோவாவின் சாதனையை, செரீனா வில்லியம்ஸ் சமன் செய்தார். ஓபன் எராவில், செரீனா வில்லியம்ஸை விட, சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் மட்டும்தான் 307 கிராண்ட்ஸ்லாம் வெற்றிகளை பெற்றுள்ளார். அடுத்த சுற்றில் செரீனா வில்லியம்ஸ், சுவீடனின் ஜோஹன்னா லார்ஸனை எதிர்கொள்ள உள்ளார். அவரை வீழ்த்துவதன் மூலம் பெடரரின் சாதனையையும், செரீனா வில்லியம்ஸ் சமன் செய்து விடுவார் என எதிர்பார்க்கலாம்.
மகளிர் ஒற்றையர் 2ம் சுற்றின் மற்றொரு போட்டியில், செரீனா வில்லியம்சின் சகோதரியும், இரு முறை முன்னாள் சாம்பியனுமான வீனஸ் வில்லியம்ஸ், 6-2, 6-3 என்ற செட் கணக்கில் ஜுலியா ஜார்ஜஸை வீழ்த்தினார். போலந்தின் அக்னீஸ்கா ரத்வான்ஸ்கா, 7-6 (11-9), 6-3 என்ற செட் கணக்கில், பிரிட்டனின் நவோமி பிராடியை வீழ்த்தினார். 5ம் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சிமோனா ஹாலெப், 6-3, 6-4 என்ற செட் கணக்கில் செக் குடியரசின் லூசி சபரோவாவை எளிதாக வீழ்த்தி, 3ம் சுற்றுக்கு முன்னேறினார். செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா, 6-1, 7-5 என்ற கணக்கில் பராகுவேவின் மொன்செராட் கோன்சலஸை வீழ்த்தினார்.
ஆண்கள் ஒற்றையர் 2ம் சுற்றில், உலகின் 2ம் நிலை வீரரும், பிரிட்டனை சேர்ந்தவருமான ஆன்டி முர்ரே, ஸ்பெயினின் மார்ஷல் கிரானோலர்ஸை எதிர்கொண்டார். இதில், 6-4, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் முர்ரே வெற்றி பெற்று, 3ம் சுற்றுக்கு முன்னேறினார். இந்த சுற்றில் பிரான்சின் ஜிலெஸ் சிமோன் அல்லது இத்தாலியின் லோரென்சியை, முர்ரே எதிர் கொள்ள உள்ளார். மற்றொரு போட்டியில், 6ம் நிலை வீரரான ஜப்பானை சேர்ந்த நிஷிகோரி, 6-4, 4-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் ரஷ்யாவின் கரேன் காச்சனோவ்வை வீழ்த்தி, 3ம் சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில், ஆஸ்திரியாவை சேர்ந்த 8ம் நிலை வீரரான டொமினிக் தீம், 6-4, 6-3, 6-2 என்ற செட் கணக்கில், லித்துவேனியாவின் ரிச்சர்ட்ஸ் பெரன்கிஸ்ஸை வீழ்த்தி, 3ம் சுற்றுக்குள் நுழைந்தார். இதில், பெரும்பாலான போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டது. இதனால் மேற்கூரை மூடப்பட்டு போட்டிகள் தொடர்ந்து நடத்தப்பட்டன.