பார்வை சர்ச்சை
8/17/2016 5:39:17 PM
‘மிஸ்டர் ரிஷிராஜ் சிங் ஐபிஎஸ்! 2016ல் இதைப் புரிந்துகொள்ள முடியாதா? 14 வினாடிகள் இளம்பெண்ணைப் பையன்கள் பார்த்தால் என்ன நடந்துவிடும்? ஆண்கள் ெஹல்மெட் போடாவிட்டால் மடக்குகிறார்கள். பெண்கள் என்றால் போலீஸ் விட்டு விடுகிறார்களே... ஆண்கள் என்ன முட்டாள்களா?’கேரளக் கலால்துறை ஆணையர் ரிஷிராஜ் சிங், கொச்சியில் நடந்த சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் மாணவர்கள் பங்கேற்ற விழாவில் நிகழ்த்திய உரைக்கு, அனூப் அசோக் என்ற இளைஞரின் பதிலடிதான் இது.பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது. பொது இடங்களில் ஆண்களால் தங்களுக்குத் தொல்லை ஏற்பட்டால், உடனடியாகப் பெண்கள் போலீசில் புகார் செய்ய வேண்டும். தன்னை ஒரு ஆண் 14 வினாடிகள் பார்த்ததாகப் போலீசில் புகார் செய்தால் கூட, அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கலாம்’ என்பதுதான் ரிஷிராஜ் சிங் பேச்சின் சாரம்.
எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது. ரிஷி சற்று உணர்ச்சிவசப்பட்டுப் பேசியிருக்கிறார்.
‘பெண்கள் தற்காப்புக்கலையை அறிந்து வைத்திருக்க வேண்டும். கத்தி மற்றும் பெப்பர் ஸ்பிரே போன்றவற்றைக் கையில் வைத்திருக்க வேண்டும்’ என்றும் ரிஷி தனது பேச்சில் குறிப்பிட்டிருக்கிறார். அதிகாரிகள் பேசுவதெல்லாம் சட்டம் கிடையாது. 14 வினாடிகள் ஆண் தன்னைப் பார்த்தார் என்பதற்காக எந்தப் பெண்ணும் புகார் கொடுக்கப்போவதும் இல்லை. எந்த அதிகாரியானாலும் சரி, தன்னிலை மறந்ததாகவும், கைதட்டலுக்கும், வெற்று ஆரவாரத்துக்காகவும் பேச்சு அமைந்துவிடக்கூடாது.கேரள விளையாட்டுத்துறை அமைச்சர் ஜெயராஜன், ‘ரிஷியின் பேச்சு ஏற்கக்கூடியதல்ல. ஒவ்வொரு மனிதனிடத்திலும் பலவீனம் இருக்கத்தான் செய்கிறது’ என்று கூறியிருக்கிறார்.
‘முதலில் 13 வினாடி. அப்புறம் 1 வினாடி ஓய்வு. பின்னர் 15-27 வினாடிகள்... இப்படித்தான் இனி பார்க்க வேண்டும்’ என்றெல்லாம் சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் குவிகின்றன.பார்வைகள் பலவகை. ஒருவர் எவ்வளவு நேரம் மற்றொருவரை உற்றுநோக்குகிறார் என்பதை விட, பார்வை கண்ணியமானதாக இருக்க வேண்டும் என்பதே சரி. மனதளவிலும் இது அவசியம்.‘அந்தாளு பார்வையே சரியில்ல...’ என்று பொதுவாகச் சொல்கிறோமே. உண்மைதான். ஒருவரின் எண்ணங்களைக் கண்கள் காட்டிக்கொடுத்துவிடும். அதை மறைக்க முடியாது. நெருப்பு போல் பார்வை இருந்தால், உறுத்தல் பார்வையையும் பொசுக்கிவிடலாம். ஆம். பார்வைகளுக்குப் பயப்படக்கூடாது.