மண்ணடியில் பயங்கரம் - கழுத்து அறுத்து தொழிலதிபர் படுகொலை; மனைவி, கள்ளக்காதலியிடம் போலீசார் தீவிர விசாரணை
8/16/2016 3:33:44 PM
தண்டையார்பேட்டை, -சென்னை மண்ணடியில் வாயில் துணியை அமுக்கி, கழுத்து அறுத்து தொழிலதிபர் படுகொலை செய்யப்பட்டார். கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக இந்த சம்பவம் நடந்ததா என கள்ளக்காதலி மற்றும் அவரது மனைவியிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சென்னை மண்ணடி கிருஷ்ணன் கோயில் தெருவில் உள்ள ஒரு வாடகை வீட்டின் 3வது மாடியில் வசித்து வந்தவர் அக்பர் (49). தொழிலதிபரான இவர், மண்ணடி பகுதியில் இரும்பு கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பாத்திமுத்து (35). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இவர்களது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம்.நேற்றிரவு வியாபாரம் முடிந்ததும் கடையை அடைத்து விட்டு வீட்டுக்கு வந்தார் அக்பர். குடும்பத்தினருடன் சாப்பிட்டார். பின்னர் அனைவரும் படுக்கைக்கு சென்றனர். பாத்திமுத்து மற்றும் அவரது பிள்ளைகள் ஒரு அறையிலும் அக்பர், தனி அறையிலும் தூங்கினர். இன்று காலையில் அக்பரின் மைத்துனர் சையது என்பவர், அக்பர் வீட்டுக்கு வந்தார். கதவு தட்டும் சத்தம் கேட்டு, பாத்திமுத்து எழுந்து வந்து கதவை திறந்தார். அவரிடம் பேச்சு கொடுத்து கொண்டே, அக்பர் தூங்கி கொண்டிருந்த அறைக்கு சையது சென்றார். அங்கு, வாயில் துணி திணிக்கப்பட்டு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் அக்பர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டார். பாத்திமுத்து மற்றும் பிள்ளைகளும் ஓடி வந்தனர். அக்பரின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர்.
பின்னர் இது குறித்து வடக்கு கடற்கரை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் போஸ், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது, மண்ணடி தெருமுனை வரை சென்று நின்றது. இதையடுத்து அக்பரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பினர். பின்னர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.இதில், அக்பருக்கும், அதே பகுதியை சேர்ந்த பாத்திமா (40) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மண்ணடியில் உள்ள ஒரு வீட்டில் இவர்கள் நெருக்கமாக இருக்கும்போது, பாத்திமுத்து பார்த்து அதிர்ச்சியடைந்தார். ஆத்திரத்தில் அங்கு கிடந்த ஒரு பாட்டிலை எடுத்து கணவரை சரமாரியாக தாக்கியுள்ளார். படுகாயம் அடைந்த அக்பர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். அன்று முதல் கணவரை கடுமையாக கண்டித்ததோடு அவர், மீது கடும் வெறுப்பில் இருந்தார். அதற்கு பிறகு பாத்திமாவை பார்ப்பதை அக்பர் தவிர்த்துள்ளார். ஆனாலும், பாத்திமா, அக்பரின் வீட்டின் அருகே உள்ள கடைக்கு அடிக்கடி வந்து, அக்பருடன் சண்டை போட்டுள்ளார். கடந்த வாரம்கூட கடைக்கு வந்த பாத்திமா, அங்கிருந்தவர்கள் முன்பு சண்டை போட்டுள்ளார். எனவே கள்ளக்காதல் தொடர்பாக அக்பர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் பாத்திமாவிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும், அக்பருக்கு தொழில் போட்டி இருந்துள்ளது. அதனால் தொழில் போட்டி காரணமாக யாராவது தீர்த்து கட்டினார்களா எனவும் போலீசார் விசாரிக்கின்றனர். இது தவிர, அக்பர் ஒரு அறையில் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார், மற்றொரு அறையில் மனைவி மற்றும் பிள்ளைகள் இருக்கின்றனர். கதவும் பூட்டப்பட்டிருந்தது. மனைவிக்கு இது தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை. எனவே அவரது மனைவியிடமும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.