அதிவேகம் ஆபத்து
8/13/2016 12:59:39 PM
‘தடுப்பு நடவடிக்கைகளால், சாலை விபத்து உயிரிழப்புகள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது’ என்று தமிழகச் சட்டப்பேரவையில், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்த அதேநேரம், திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே வேன் மீது ஆம்னி பஸ் மோதிய கோர விபத்து நிகழ்ந்திருக்கிறது. மொத்தம் 10 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இன்னும் சிலர் ஆபத்தான கட்டத்தில் இருக்கின்றனர்.
சாலை விபத்துகள் நிகழ்வதற்குப் பல காரணங்கள் கூறப்பட்டாலும், யாரோ ஒருவரது அலட்சியம்தான் இதற்குப் பிரதானமாக இருக்க வேண்டும். பெரும்பாலும், அலட்சியம் காட்டுபவர் தப்பித்துவிட்டாலும், இறப்பவர்கள் அப்பாவிகள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஒரு குற்றமும் செய்யாதவர்களது உயிரை எடுக்கும் உரிமையை, ஓர் அலட்சியவாதி உருவாக்கிவிடுகிறார்.
கிராமங்களில் திருவிழாக்களுக்குப் பொதுமக்கள், சரக்கு வாகனங்களில் செல்வது தவறென்றாலும், இதுதான் தொடர்கிறது. கால்நடைகளை ஏற்றிவருவதில்கூட, பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. சரக்கு வாகனங்களில் நின்றபடியும், அடைத்தபடியும் பயணிக்க வேண்டும் என்பது சாமானியர்களின் விருப்பம் அல்ல. இருந்தாலும், பணம் மிச்சமாகுமே என்றெண்ணித் தான் சிரமமான பயணத்தை மேற்கொள்கின்றனர். மணப்பாறை அருகே நடந்த விபத்தில், உயிர்ப்பலி அதிகரிக்கக் காரணம், சரக்கு வேனில் 60 பேர் வரை பயணம் செய்ததுதான். இதுபோன்ற பயணங்களில் கரணம் தப்பினால் மரணம் என்பதுதான் நிலை.
அதிவேகமாக வந்த ஆம்னி பஸ், கட்டுப்பாட்டை இழந்து மின்னல் வேகத்தில் மோதியதில், வேனில் இருந்த ஆட்கள் அந்தரத்தில் தூக்கியெறியப்பட்டிருக்கின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் விபத்து நிகழ்ந்தபோதிலும், மீட்புப்பணியின் வேகத்தைத் துரிதப்படுத்த இயலவில்லை. விபத்து நடந்த இடத்தில் இருந்து 25 கி.மீ தூரம் வரை மருத்துவமனைகள் இல்லை. அப்படியே, மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு வந்தாலும், முதலுதவிச் சிகிச்சை செய்யும் அளவுக்குத்தான் வசதிகள் இருக்கின்றன. நவீனக் கருவிகள் இல்லை. இதனால், அங்கிருந்து 40 கி.மீ தூரம் உள்ள திருச்சி அரசு மருத்துவமனைக்குத்தான் படுகாயமடைந்தவர்களை ஆபத்தான நிலையில் கொண்டுவர வேண்டியிருக்கிறது. இதற்குள் உயிரிழப்பு நிகழ்ந்துவிடுகிறது என்பதுதான் கொடுமை. இதுபோன்ற நிலை, தமிழகத்தில் பல இடங்களில் இருக்கிறது.
விபத்து ஏற்படுத்திய ஆம்னி பஸ் டிரைவர் மீது கொலைக்கு நிகரான வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது. வாகனங்கள் அதிவேகத்தைக் குறைத்தாலே, பெரும் விபத்துகளைத் தவிர்க்க முடியும். அப்படியே விபத்து ஏற்பட்டாலும், உயிரிழப்பு மற்றும் சேதத்தைக் குறைக்க முடியும். இதை வாகனங்களை இயக்குபவர்கள் புரிந்துகொள்ளாதவரை, இதுபோன்ற விபத்துகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.