ஓர் அகிம்சையின் நிறைவு
8/11/2025 3:25:41 PM
நாக்கில் தேன் சுவை தித்திக்கிறது. மணிப்பூர் மாநில இரும்பு மனுஷி இரோம் சர்மிளா, 16 ஆண்டாக மேற்கொண்ட உண்ணாவிரதத்தை நிறைவு செய்கிறார். ஆயுதப்படைச் சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப் பெறுவதுதான், சர்மிளாவுக்கு மட்டுமல்ல; வடகிழக்கு மாநில மக்களுக்கும் தித்திப்பான செய்தியாக இருக்கும். உண்ணாவிரதத்தை நிறைவு செய்ததை, காந்திய வழியில் மேற்கொண்ட அகிம்சைப் போராட்டத்துக்குக் கிடைத்த தோல்வி என்று பலர் கருதினாலும், சர்மிளாவின் வழி தனி வழி.சமூகப் போராளியான அவர் அரசியலில் ஈடுபடப்போவதாக முடிவெடுத்தாலும், அதைப் பொதுமக்கள் எவ்வளவு தூரம் விரும்புகிறார்கள் என்பது போகப் போகத் தான் தெரியும். மணிப்பூர் முதல்வராக வேண்டும் என்ற லட்சியம் அவரிடம் உருவாகியிருக்கிறது. எந்த அரசியல் கட்சியில் சேரப்போகிறார் என்று முன்வைக்கப்பட்ட கேள்வியைப் புறந்தள்ளிய அவர், என்னுடன் இணைந்து பணியாற்ற பொதுமக்களே தேவை. சுயேச்சை வேட்பாளர்கள், அரசியல் பயணத்தில் இணையலாம் என்று அறிவித்திருக்கிறார்.
ஆயுதப்படையினருக்கான சிறப்பு அதிகாரம் என்பது, காலனிய ஆதிக்க காலக் கருப்புச்சட்டம். 2000 நவம்பரில் இம்பால் அருகே அசாம் ஆயுதப் படையினரால் 10 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதற்கு நியாயம் கேட்டு உண்ணாவிரதத்தைத் துவக்கினார். அவர் உணவருந்த மறுத்ததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மூக்கு வழியாக திரவ உணவு கட்டாயப்படுத்தி வழங்கப்பட்டது.எதிரிகள் பயப்படுவதற்கு, அகிம்சை போன்ற சிறந்த ஆயுதம் எதுவும் இல்லை. ஆனால், இந்த ஆயுதத்துக்குக் கூட ஆட்சியாளர்கள் பயப்படவில்லை. ஆயுதப்படைச் சிறப்பு அதிகாரச் சட்டம் ரத்தாகும் காலம்தான் பொற்காலம் என்று மணிப்பூர் மக்கள் எதிர்பார்க்கின்றனர். சர்மிளாவின் மூலம் சாத்தியமாகும் என்று கருதினாலும், அது இன்னும் கனவாகவே இருக்கிறது. வடகிழக்கு மாநில மக்கள் உணர்வுரீதியாக தேசத்துடன் இணையவில்லை என்று குற்றஞ்சாட்டப்படலாம். ஆனால், அவர்கள் எதிர்கொள்ளும் வன்முறைகளும், பிரச்னைகளும், நாட்டின் மற்ற பகுதிகளில் வசிக்கும் மக்களைக் கிஞ்சித்தும் பாதிப்பதில்லை. ஏன்... மற்ற மாநில மக்கள் அதுகுறித்துக் கவலைப்படுவதும் இல்லை. இதனால்தான், வடகிழக்கு மாநில மக்களிடம் சொல்லாமலே அன்னியத்தனம் நுழைந்திருக்கலாம்.சர்மிளாவின் போராட்டம், மணிப்பூரில் ஆயுதப்படையின் சிறப்பு அதிகாரத்தைப் பல இடங்களில் விலக்க வைத்திருக்கிறது. அதேசமயம், அது முழுமை பெற வேண்டும். அவரது போராட்ட வடிவம் இனி மாறிவிடும். அதேசமயம், மணிப்பூர் மக்களின் எண்ணங்களைச் செயல்படுத்துபவராக சர்மிளா திகழ வேண்டும். அரசியல் களத்தில் அவர் வெற்றிபெறட்டும்!