நவீன கொள்ளையர்கள்
8/10/2025 4:51:16 PM
எந்தத் துறையாக இருந்தாலும், திறமை இல்லாதவர்கள் பிரகாசிக்க முடியாது. இது கொள்ளையர்களுக்கும் பொருந்தும் போல. சேலம் - எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்த ரூ.5.78 கோடி கொள்ளைச் சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.சென்னை ரிசர்வ் வங்கிக்கு, ரயிலில் தனி பெட்டியில், ரூ.342 கோடி பணம் அனுப்பப்பட்டிருக்கிறது. இவை அனைத்தும் வங்கிகளில் பெறப்பட்ட பழைய கரன்சிகள். 226 பெட்டிகளில் இருந்த பணத்தில் 4 பெட்டிகளில் மட்டும் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது.இத்தனைக்கும் பக்கத்துப்பெட்டியில், பாதுகாப்புக்காக டிஎஸ்பி உள்பட 9 போலீசார் வந்திருந்தனர். இரவு 9 மணிக்குச் சேலத்தில் புறப்பட்ட ரயில், காலை 4.40 மணிக்குச் சென்னை எழும்பூர் வந்தடைந்திருக்கிறது. ரயில் பெட்டியில் ஏற்பட்ட பணத்தை இறக்குவதற்காக காலை 11 மணிக்குத்தான் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் ரயில் பெட்டிக்குள் சென்றனர். மேற்கூரை உடைக்கப்பட்டதைப் பார்த்து அவர்களுக்கு அதிர்ச்சி.
ஓடும் ரயிலில் ரிசர்வ் வங்கியின் பணம் இப்படி கொள்ளை போனது இது முதல்முறை. மேற்கூரையை உடைப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. கட்டிங் கருவி தேவைப்பட்டிருக்கும். ரயில் இன்ஜின் சத்தத்தில் கட்டிங் கருவியில் துளையிடும் சத்தம் கேட்டிருக்காது என்று கூறப்பட்டாலும், கொள்ளையர்களின் துணிச்சல் அசாத்தியமானதுதான்.
விருத்தாச்சலத்துக்கு ரயில் வந்தடைந்ததும் மின் இன்ஜின் ெபாருத்தப்பட்டிருக்க வேண்டும். அங்கு ரயில், கூடுதல் நேரம் நிறுத்தப்பட்டிருக்கிறது. சேலத்தில் இருந்து 12 ரயில் நிலையங்களைக் கடந்து வந்திருக்கிறது. வங்கி நடவடிக்கைகள் தெரிந்த கொள்ளையர்கள் திட்டமிட்டுத்தான் ரயிலில் வந்திருக்க வேண்டும். ஏழு மணி நேர இடைவெளியில் கொள்ளையைக் கச்சிதமாக நிறைவேற்றியிருக்கின்றனர்.
பணம் கொண்டுசெல்வதில் உள்ள பாதுகாப்புக் குளறுபடிகளை, கொள்ளைச் சம்பவம் அம்பலப்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, பொதுத்துறை வங்கிகள் பணம் கொண்டு செல்லும் முறை, தனியார் வங்கிகளைப் போல், வேகமாகவும், திறனுடனும் மேற்கொள்ளப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.ரயில்களில் நடைபெறும் கொள்ளைச்சம்பவங்களுக்கு, பயணிகளிடம் விழிப்புணர்வு இல்லாதது ஒரு காரணம் என்று கூறப்படுவதுண்டு. ஆனால், கோடிக்கணக்கில் பணம் கொண்டுசெல்லப்படும்போது கூட, பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக இருந்திருக்கிறது என்றால் அதை எப்படி ஏற்றுக்கொள்வது?நவீன காலத்தில் கத்தியின்றி, ரத்தமின்றி, கொள்ளைகள் அரங்கேறுகின்றன. போலீசார் புத்திசாலிகள் என்றால், கொள்ளையர்கள் அதிபுத்திசாலிகளாக இருக்கிறார்கள். கொள்ளையர்களின் சவால்கள் முறியடிக்கப்பட வேண்டும். இதுபோன்ற கொள்ளை, முதலாவதாக மட்டுமல்ல; முடிவானதாகவும் இருக்க வேண்டும்.