தமாகா நிர்வாகிகளுடன் ஆலோசனை உள்ளாட்சி தேர்தலில் வெற்றி காண்போம் - ஜி.கே.வாசன் உறுதி
7/29/2016 5:47:37 PM
சென்னை, -தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் உள்ளாட்சி தேர்தல் குறித்து மாவட்ட நிர்வாகிகளுடனான 3 நாள் ஆலோசனை கூட்டம் சென்னையில் இன்று துவங்கியது. கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கினார்.இக்கூட்டத்துக்கு பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது, அதற்கான வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் இன்று முதல் மாவட்ட வாரியாக நடைபெற இருக்கிறது.
ஒவ்வொரு நாளும் தலா 24 மாவட்டங்களை சேர்ந்த தலைவர்கள், பொறுப்பாளர்கள் பங்கேற்கின்றனர். வெற்றி வாய்ப்பு உள்ள நபர்களை முன்னிறுத்தி கட்சியை வளர்ப்போம். சட்டமன்றத் தேர்தல் போல் இல்லாமல் விரைவில் முடிவெடுத்து களமிறங்கி செயல்பட்டு வெற்றி காண்போம்.
ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு போவது சந்தர்ப்பவாத அடிப்படையில்தான். இது அனைத்து கட்சிகளிலும் நடைபெறுகிறது. சந்தர்ப்பவாதிகள் கட்சியை விட்டு போனாலும், உண்மையான தொண்டர்கள் என்னுடனே இருக்கின்றனர்.மேலும், தமிழகத்தின் நீண்ட நாள் பிரச்னையாக இருக்கிற முல்லை பெரியாறு, பாலாறு, காவிரி, மீனவர் பிரச்னை உள்ளிட்ட விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதார பிரச்னைகளில் விரைந்து தீர்வு காண மத்திய-மாநில அரசுகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமாகா கட்சியின் இளைஞரணி சார்பாக வரும் 3-ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டத்தில் நான் உட்பட முக்கிய கட்சி பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.