கவுன்சிலர் மறைவுக்கு இரங்கல் மாநகராட்சி மன்றம் ஒத்திவைப்பு
7/29/2016 5:47:13 PM
சென்னை, -சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. மேயர் சைதை துரைசாமி தலைமை வகித்தார். கமிஷனர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.சமீபத்தில் 21-வது வார்டு அதிமுக கவுன்சிலர் முல்லை ஞானசேகர் படுகொலை செய்யப்பட்டார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை மேயர் துரைசாமி, மன்றக் கூட்டத்தில் கொண்டு வந்தார். அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘‘ஞானசேகர் 1996ம் ஆண்டு முதல் மணலி பேரூராட்சி தலைவராகவும், 2006ம் ஆண்டு முதல் மணலி நகராட்சி தலைவராகவும், 2011ம் ஆண்டு முதல் விரிவாக்கம் செய்யப்பட்ட மாநகராட்சியின் மணலி பகுதி மாமன்ற உறுப்பினராகவும் சிறப்பாக பணியாற்றினார்’’ என குறிப்பிட்டார். இரங்கல் தீர்மானத்தின்மீது அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள் பேசினர். இதைத் தொடர்ந்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. நாளை மன்றக் கூட்டம் நடைபெறும் என்று மேயர் அறிவித்தார்.
மன்றத்துக்கு வெளியே மாநகராட்சி திமுக எதிர்க்கட்சி தலைவர் போஸ் கூறும்போது, ‘‘முல்லை ஞானசேகரின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த ஆட்சியில் மன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு இல்லை. 5 ஆண்டுகளில் மாநகராட்சி கவுன்சிலர்கள் 2 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தமிழக மக்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை’ என்று கூறினார்.காங்கிரஸ் கவுன்சிலர் தமிழ்செல்வன் கூறுகையில், ‘பொதுமக்களுக்கும் சமூக சிந்தனை கொண்ட அரசியல்வாதிகளுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். ரவுடிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்’ என்றார்.