சஸ்பெண்ட் செய்யப்பட்ட நெல்லை வக்கீல் சங்க தலைவர் முத்துராமலிங்கம் திடீர் மரணம்
7/29/2016 5:45:56 PM
நெல்லை, -பார்கவுன்சிலால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நெல்லை வக்கீல் சங்கத் தலைவர் முத்துராமலிங்கம் இன்று காலை திடீரென்று மரணம் அடைந்தார். மனஉளைச்சலால் அவர் மரணமடைந்ததாக கூறப்படுகிறது. நெல்லை வக்கீல் சங்கத்துக்கு கடந்த 13 ஆண்டு காலம் தலைவராக இருந்தவர் முத்துராமலிங்கம் (63). வக்கீல்களுக்கான புதிய சட்டத்திருத்தம் ெகாண்டுவந்தபோது அதை எதிர்த்து தீவிரமாக போராடினார்.இந்நிலையில் போராட்டம் நடத்திய தமிழகத்தை சேர்ந்த 126 வக்கீல்களை இந்திய பார்கவுன்சில் இருதினங்களுக்கு முன்பு சஸ்பெண்ட் செய்தது. இதில் முத்துராமலிங்கமும் ஒருவர்.தஞ்சாவூரில் நேற்று நடந்த வக்கீல்கள் சங்க மாநில செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்று விட்டு காரில் இன்று அதிகாலை முத்துராமலிங்கம் நெல்லை திரும்பினார். வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த அவர் மனஉளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
உடனே அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
முத்துராமலிங்கத்துக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும், வருண், ரமேஷ் என்ற மகன்களும் உள்ளனர். வருண் அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினியராக உள்ளார். ரமேஷ் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் படித்து வருகிறார்.பாளை கேடிசி நகர் காமாட்சியம்மன் கோயில் தெருவில் உள்ள வீட்டில் முத்துராமலிங்கத்தின் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது நண்பர்கள் மற்றும் வக்கீல்கள் அஞ்சலி செலுத்தினர். நாளை மறுநாள் அவரது இறுதிச்சடங்கு நடக்கிறது. பார்கவுன்சிலால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட வக்கீல் முத்துராமலிங்கத்தின் திடீர் மரணம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.