காற்றாலை மின் உற்பத்தி கடும் சரிவு - காற்றாலை மின் உற்பத்தி கடும் சரிவு
7/29/2016 5:26:35 PM
நெல்லை, -காற்று சீசன் காலத்தில் காற்றின் வேகம் திடீரென குறைந்ததால் காற்றாலை மின் உற்பத்தி மூவாயிரம் மெகாவாட்டில் இருந்து 203 மெகாவாட்டாக குறைந்தது.தமிழகத்தில் நாள்தோறும் சராசரியாக 15 முதல் 16 ஆயிரம் மெகாவாட் வரை மின் நுகர்வு செய்யப்படுகிறது. பல்வேறு வழிகளில் மின் உற்பத்தி செய்யப்பட்டாலும் பற்றாக்குறை நீடிப்பதால் தனியாரிடம் இருந்து 2 ஆயிரம் முதல் 2 ஆயிரத்து 500 மெகாவாட் வரை மின்சாரம் விலை கொடுத்து வாங்கப்படுகிறது.இதில் ஜூலை முதல் அக்டோபர் வரையிலான மாதங்களில் காற்று சீசன் என்பதால் காற்றாலை மின் உற்பத்தி அதிகளவில் மின்தேவையை பூர்த்தி செய்கிறது. தமிழகத்தில் உள்ள சுமார் 7 ஆயிரத்து 500 காற்றாலைகள் மூலம் காற்று சீசனில் அதிகபட்சமாக 3 ஆயிரத்து 500 மெகாவாட்டை கடந்து மின்சாரம் உற்பத்தியாகிறது.
நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களில்தான் காற்றாலைகள் அதிகளவில் நிறுவப்பட்டுள்ளன. கடந்த 2 மாதங்களாக காற்று சீசன் சிறப்பாக இருப்பதால் காற்றாலை மின் உற்பத்தி வழக்கம் போல் அதிகளவில் நடைபெறுகிறது. இதில் உச்சகட்டமாக ஆடி மாதத்தில் காற்றாலைகள் 24 மணி நேரமும் சுழன்று அதிக மின்உற்பத்தியை தருவது வழக்கம். இதன்படி கடந்த வாரம் வரை காற்றாலை மின்உற்பத்தி அதிகபட்சமாக 2 ஆயிரத்து 500 மெகாவாட்டில் இருந்து 3 ஆயிரத்து 500 மெகாவாட் வரை நடைபெற்றது.
இந்த நிலையில் கடந்த 27ம் தேதி காற்றாலை மின்உற்பத்தி 2 ஆயிரத்து 221 மெவா என இருந்தது. இது நேற்று அதிகாலை ஆயிரத்து 90 மெகாவாட்டாக குறைந்தது. அதன்பிறகு காற்று மாயமானது. நேற்று காலை போதிய காற்று வீசவில்லை. காற்று சீசனுக்குஉரிய எந்த அறிகுறியும் இல்லாமல் வெயில் கொளுத்தியது.நேற்று காலை 8 மணி நிலவரப்படி காற்றாலை உற்பத்தி குறைந்த பட்சமாக 70 மெகாவாட்டாகவும் அதிகபட்சமாக 203 மெகாவாட்டாகவும் சரிந்தது. ஆடி காற்று சீசனில் காற்றாலைகள் சுழலாமல் நின்றது காற்றாலை உற்பத்தியாளர்களிடம் வியப்பை ஏற்படுத்தியது. திடீரென காற்றாலை உற்பத்தி குறைந்ததால் மின் தேவை அதிகரித்தது. இதனால் நேற்றைய அதிகபட்ச மின் கொள்முதல் 2 ஆயிரத்து 558 மெகாவாட்டாக உயர்ந்தது.