தூத்துக்குடி மாவட்டத்தில் காற்றில் பறக்கும் முதல்வர் உத்தரவு டாஸ்மாக் ஊழியர்கள் விரக்தி
7/29/2016 5:25:14 PM
உடன்குடி, -தூத்துக்குடி மாவட்டத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட டாஸ்மாக் ஊழியர்களுக்கு மீண்டும் வேலை வழங்குமாறு முதல்வர் உத்தரவிட்டார். ஆனால், அவரது உத்தரவை காற்றில் பறக்கவிடுவது போல், இன்றுவரை ஏராளமானோருக்கு வேலை வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் கடும் விரக்தியில் உள்ளனர்.அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி மீண்டும் ஆட்சியை பிடித்த ஜெயலலிதா, டாஸ்மாக் கடைகளின் நேரத்தை குறைத்ததோடு முதற்கட்டமாக 500 கடைகள் மூட உத்தரவிட்டார். இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 30 கடைகள் மூடப்பட்டன.
மூடப்பட்ட கடைகளில் பணியாற்றியோர் தங்களுக்கு மாற்றுத் துறையில் பணி வழங்கப்படும் என எதிர்பார்த்தனர். இதற்கான சீனியாரிட்டி பட்டியல் தயாரிக்கப்பட்டபோதும் இதில் குளறுபடிகள் உள்ளதாக புகார் எழுந்தது. பெரும்பாலானோருக்கு அருகேயுள்ள டாஸ்மாக் கடைகளில் பணி வழங்கப்பட்டுள்ளது.
இதில் சில மேற்பார்வையாளர்கள் பறக்கும்படை ஆய்வுக்குழுவிலும், விற்பனையாளர்கள் சிலர் அலுவலகப் பணியிலும் நியமிக்கப்பட்டுள்ளனர். எஞ்சிய 6 ஊழியர்கள் மட்டும் காத்திருப்போர் பட்டியிலில் உள்ளனர்.
இதனிடையே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான டாஸ்மாக் ஊழியர்கள் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டனர். இவர்களது கோரிக்கையை பரிசீலித்த முதல்வர், மீண்டும் பணி வழங்குமாறு நிர்வாக இயக்குநருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் பல்வேறு மாவட்டங்களில் பலர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். ஆனால், தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் முதல்வர் உத்தரவை காற்றில் பறக்கும் விடும் வகையில் இன்னும் ஒரு சில ஊழியர்கள் பணியில் அமர்த்தப்படவில்லை. இதனால் அவர்கள் கடும் விரக்தியில் உள்ளனர்.எனவே, எஞ்சியுள்ளவர்களையும் உடனடியாகப் பணியில் அமர்த்த தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.