பிஸ்கட் வாங்கியதில் ₹15 பாக்கி தலித் தம்பதியை கோடாரியால் வெட்டி கொன்ற கடைக்காரர் - உத்தரபிரதேசத்தில் பயங்கரம்
7/29/2016 4:43:12 PM
லக்னோ, -உத்தரபிரதேசத்தில் பிஸ்கட் பாக்கெட் வாங்கியதில் ரூ.15 கடனை அடைக்காததால், தலித் கணவன் மனைவியை கோடாரியால் கடைக்காரர் ஒருவர் வெட்டி கொன்றார். உத்தரபிரதேசத்தில் அண்மைக்காலமாக தலித்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதற்கிடையே, மாயாவதியை பாஜ துணை தலைவர் தயாசங்கர் சிங் அவதூறாக பேசிய விவகாரமும், தலித் மக்களுக்கு எதிரான பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில், சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங்கின் சொந்த தொகுதியான மெயின்புரியில் வெறும் 15 ரூபாய் கடன் பிரச்னைக்காக தலித் தம்பதி, உயர்சாதி கடைக்காரர் ஒருவரால் கோடாரியால் வெட்டி கொலை செய்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மெயின்புரிஅருகே உள்ள லகிம்பூர் கிராமத்தைச் சேர்ந்த தலித் குடும்பத்தினரான பரத்நாத் (45), அவரது மனைவி மம்தா (40) ஆகியோர் கூலி வேலை செய்து வந்தனர். இவர்களுக்கு 5 குழந்தைகள் உள்ளனர். தங்கள் வீட்டுக்கு அருகே உள்ள உயர்சாதியை சேர்ந்த அசோக் மிஸ்ரா என்பவரின் பலசரக்கு கடையில் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவது வழக்கம். கடந்த வாரம், பிஸ்கட் பாக்கெட் வாங்கி விட்டு ரூ.15 கடன் பாக்கி வைத்திருக்கிறார்கள். அதை திருப்பித் தராததால், அசோக் மிஸ்ரா ஆத்திரமடைந்து கோடாரியால் பரத்நாத்தையும், மம்தாவையும் கொடூரமாக வெட்டினார். படுகாயமடைந்த இருவரும் துடிதுடித்து உயிரிழந்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அசோக் மிஸ்ராவை கைது செய்துள்ளனர். தற்போது இந்த விவகாரம் உத்தரபிரதேசத்தில் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.