வன்முறையை தூண்டும் பேச்சு மாயாவதி மீது வழக்கு பீகார் நீதிமன்றம் உத்தரவு
7/29/2016 4:41:26 PM
ஹாஜிப்பூர், - தயாசங்கர் குடும்பத்திற்கு எதிராக வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியதற்காக உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி உள்ளிட்ட 4 பேர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய பீகார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதியை அவதூறாக பேசிய பாஜ துணை தலைவர் தயாசங்கரை கைது செய்ய கோரி பகுஜன் சமாஜ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் பகுஜன் சமாஜ் கட்சிக்கும், பாஜவுக்கும் இடையே மோதல் அதிகமாகி உள்ளது. இதற்கிடையில், தன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி ஐகோர்ட்டில் தயாசங்கர் சிங் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது. இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில் பீகாரில் வைஷாலி மாவட்ட தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஹாஜிப்பூரை சேர்ந்த அஜித்சிங் என்பவர் மாயாவதிக்கு எதிராக ஒரு மனு தாக்கல் செய்தார்.
அதில், ‘‘லக்னோவில் கடந்த 21ம் தேதி நடைபெற்ற பொது கூட்டத்தில் மாயாவதி மற்றும் அவரது கட்சியின் தேசிய செயலாளர் நசிமுதீன் சித்திக், மாநில தலைவர் ராம் அச்சல் ராஜ்பார், மாநில செயலாளர் மெவா லால் ஆகியோர் பேசினர். அவர்கள், தயாங்கர் சிங் குடும்பத்திற்கு எதிராக பகுஜன்சமாஜ் கட்சியினர் போராட வேண்டுமென வன்முறையை தூண்டும் வகையில் பேசினர். மேலும், அவர்களின் பேச்சு சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் உள்ளது. எனவே, மாயாவதி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம், வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியதற்காக மாயாவதி உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே மாயாவதி மற்றும் அவரது கட்சியினர் தங்களை அச்சுறுத்தி வருவதாக தயாசங்கர் குடும்பத்தினர் உத்தரபிரதேச கவர்னர் ராம்நாயக்கிடம் புகார் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.