மான்களை வேட்டையாடிய விவகாரம்சல்மான்கான் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு - ராஜஸ்தான் அரசு முடிவு
7/29/2016 4:40:48 PM
ஜோத்பூர், - பாலிவுட்டில் பிரபல நடிகரான சல்மான்கான், கடந்த 1998ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூருக்கு ஒரு படப்பிடிப்புக்காக சென்றிருந்தார். அப்போது, அங்குள்ள வனப்பகுதியில் அரிய வகை மான்களை அவர் வேட்டையாடியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, சல்மான்கான் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அந்த வழக்குகளை விசாரித்த விசாரணை நீதிமன்றம், சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.
இந்த தண்டனையை ரத்து செய்யக்கோரி, ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் சல்மான்கான் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த திங்களன்று வெளியானது. போதிய ஆதாரம் இல்லாததால் வழக்கில் இருந்து சல்மான்கானை நீதிமன்றம் விடுதலை செய்தது.
வழக்கு விசாரணையின்போது சல்மான்கானின் முன்னாள் கார் டிரைவர் துலானி ஆஜராகாதது, சல்மான்கான் விடுதலைக்கு சாதகமாக அமைந்தது.
இந்நிலையில், சல்மான்கான் மான்களை வேட்டையாடியது உண்மைதான் என சில தினங்களுக்கு முன்பு துலானி மீண்டும் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. தனக்கும், குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல் பாதுகாப்பு இல்லாததால் தலைமறைவாக இருந்ததாகவும் துலானி கூறியுள்ளார். துலானிக்கு பாதுகாப்பு கொடுக்க தயாராக உள்ளதாக ராஜஸ்தான் மாநில உள்துறை அமைச்சர் குலாப் சந்த் கட்டாரியா தெரிவித்துள்ளார். இந்நிலையில், சல்மான்கானின் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர ராஜஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளது. இதனால், விடுதலையான சல்மான்கானுக்கு மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது.