நாக்பூரில் ஓய்வெடுக்க கெஜ்ரிவால் திட்டம்
7/29/2016 4:39:59 PM
புதுடெல்லி, - டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் இயற்கை மற்றும் பாரம்பரிய மருத்துவத்தின் மீது நம்பிக்கை கொண்டவர். உடல் நலக்குறைவு ஏற்பட்டால் பாரம்பரிய மருத்துவத்தை நாடுவது வழக்கம். தற்போது, டெல்லி மாநில ஆம் ஆத்மி அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டிருக்கிறது. மத்திய அரசின் உள்துறை கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை, மாநில அரசை மதிப்பதில்லை. மேலும், பல்வேறு வழக்குகளில் ஆம்ஆத்மி எம்எல்ஏக்கள் 12 பேர் வரிசையாக கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, கெஜ்ரிவால் பிரதமர் மோடி மீது கடுமையாக தாக்கிப் பேசினார். அரசியல் பிரஷர் எகிறிய நிலையில், சில நாள்கள் ஓய்வெடுக்க கெஜ்ரிவால் திட்டமிட்டிருக்கிறார்.
ஆகஸ்ட் மாதத்தில் 12 நாட்களுக்கு நாக்பூரில் விபாசனா என்ற பாரம்பரிய மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள அவர் முடிவு செய்திருக்கிறார். அங்கிருக்கும் போது ஊடகங்கள் எதற்கும் அனுமதி கிடையாது என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளார். ஜூலை 30ம் தேதி புறப்படும் அவர் 12 நாட்களுக்கு நாக்பூரில் மருத்துவ ஓய்வில் இருப்பார் என்று துணை முதல்வர் சிசோடியாவும் அறிவித்துள்ளார். கெஜ்ரிவால் விடுப்பின் போது டெல்லி அரசு நிர்வாகத்தை துணை முதல்வர் சிசோடியாக கவனிப்பார்.
ஏற்கனவே கடந்த 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட கெஜ்ரிவால் இதே போன்று மருத்துவ விடுப்பில் சென்றார். அதே போல் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி மாதம் 10 நாட்கள் மருத்துவ விடுப்பில் சென்றார். 10 மாதங்களுக்கு முன்பு கடுமையான இருமலால் அவதிப்பட்ட கெஜ்ரிவால் பெங்களூருவில் உள்ள மருத்துவ மையத்தில் தங்கியிருந்து இயற்கை மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.